ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும் தேர்தல் தோல்விக்கு பின்னர் கூட்டணி கட்சியினரை விமர்சனம் செய்வதும் பாமகவின் வாடிக்கையாக உள்ளது என அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் குறித்து அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்ததற்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புகழேந்தி பேசுகையில், “தமிழ்நாட்டில் 53 ஆண்டுகளாக திமுகவும் அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெற்று, ஆட்சி புரிந்து வருகின்றன. ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி மக்களால் நிர்ணயிக்கக் கூடிய ஒன்று.

அதிமுக கூட்டணியிலிருந்து கொண்டு, 23 இடங்களைப் பெற்றுக் கொண்ட அன்புமணி ராமதாஸ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை நாங்கள் பொருட்டாக மதிப்பதில்லை என்று தேவையில்லாத கருத்துகளைக் கூறி வருகிறார்.

ஆனால், ஓபிஎஸ் அவர்கள் கையெழுத்து போட்டதால் தான் இன்று அதிமுக மூலமாக அன்புமணி எம்பி ஆக உள்ளார். எங்கள் கட்சியின் தலைவர்களைப் பற்றிப் பேசுவது முறையானதல்ல. பாமகவால் எந்த வகையிலும் எந்த உதவியும் இல்லை. இதை உணர வேண்டும்.

எனவே அவர்கள் தவறாக ஒரு கட்சியை பற்றி பேசக்கூடாது, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் பாமக தோற்றுவிட்டதாக சொல்வதை ஏற்க முடியாது. பாமக இல்லை என்றால் 20 இடங்களில் தான் அதிமுக வெற்றி பெற்று இருக்கும் எனக் கூறுகிறார். 23 இடங்களில் 18 தோற்றதை பற்றி பாமக முதலில் ஆய்வு செய்ய வேண்டும்.

பாமக வலுவாக உள்ள பகுதிகளில் எல்லாம் முழுவதுமாக அதிமுக தோற்றுள்ளது. எனவே அவர்கள் எங்கள் தலைவர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும் தேர்தல் முடிவுக்கு பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் பாமகவின் வாடிக்கையாக உள்ளது.

ஒரு கூட்டணியில் சேருவது பின்னர் வெளியே வருவது. எங்களால் தான் எல்லாமே நடந்தது என்று சொல்வதை ஏற்க முடியாது. பாஜக, பாமக கட்சிகளுடன் பயணித்தால் தோற்றோம் என்று எங்கள் கட்சித் தலைவர்களோ நிர்வாகிகளோ பேசவே இல்லை.

மேலும், ஒ.பன்னீர்செல்வத்தைப் பற்றிப் பேசினால் வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தால் அது முட்டாள்தனமானது. சிறிய கட்சி அதிமுகவைக் கிண்டல் செய்ததால் எப்படி வேடிக்கை பார்க்க முடியும். கூட்டணிக் கட்சிகளுக்குத் தந்த 49 தொகுதிகளில் 40 தொகுதிகள் தோல்வி அடைந்துள்ளனர்” என விமர்சித்துள்ளார்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சிவசங்கர் பாபா மீது பாய்ந்தது போக்சோ சட்டம்