உத்திரப் பிரதேச மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை திறந்து வைக்கும் விழாவில், பாஜக எம்.எல்.ஏ சாலையில் தேங்காயை உடைக்க, சாலை உடைந்து சிதறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருப்பதால் வாக்குகளைக் கவர்வதற்காக பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக கட்சினர் நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகளையும், பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பிஜ்நூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை திறந்து வைக்கும் விழாவில் பாஜக எம்.எல்.ஏ சாலையில் தேங்காயை உடைக்க, தேங்காய் உடையாமல் சாலை உடைந்து சிதறியது அங்கிருந்த பொதுமக்கள் உள்பட பாஜகவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிஜ்நூர் பகுதியில் ரூ.1.16 கோடி மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (3.12.2021) அன்று நடைபெற்ற சாலை திறப்பு விழாவில் பாஜக எம்.எல்.ஏ சுசி சௌத்ரி சாலையில் போக்குவரத்தை துவக்கி வைக்க பூஜை செய்து தேங்காயை அடித்து உடைத்தார்.

அப்போது தேங்காய் உடையாமல், புதிதாக அமைக்கப்பட்ட சாலை பெயர்ந்து சிதறியது. இச்சம்பவம் சாலையின் தரம் மோசமானதாக இருப்பதை அம்பலமாக்கியது. இச்சம்பவம் சமூக வலைதளங்களிலும் வைரலானது.

அங்கு கூடியிருந்த மக்கள் பலரும் இச்சம்பவத்தால் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தனர். தேர்தல் நெருங்குவதால் அவசர அவசரமாக சாலை அமைத்து கொள்ளையடிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.