நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றிக் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்தார். இதனையடுத்து 2022 -23ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் நாடாளுமன்றத்தில் 2023 -24ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனையடுத்து இன்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி, “ஒரே நாடு, ஒரு ரேஷன் கார்டு தொடங்கி இந்த நாடு ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜக திட்டம் ஒருபோதும் பலிக்காது.

மாநிலங்களின் உரிமைகளை பறிக்க முயற்சிகளை செய்கிறீர்கள். மக்கள் நல அரசு என்பதற்கும் இலவச திட்டங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்துக்கொள்ள மறுக்கிறீரகள். நாங்கள் மாநிலங்கள் சமூக நீதிக்கான மாடல்களை உருவாக்க முடிகிறது. ஆனால் உங்களால் அது முடியவில்லை.

தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். தமிழ்நாட்டில் தேர்தல் ஏதும் இல்லை என்பதால் குடியரசு தலைவர் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்ட ஒன்றிய அரசு மறந்துவிட்டது.

தமிழ்நாட்டில் ஆளுநர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மட்டும் நிற்கவில்லை. மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆளுநர்கள் இதையே பின்பற்றுகிறார்கள்.

மாநில ஆளுநர்கள் ஒன்றிய அரசின் கருவியாக பயன்படுத்தப்படுகின்றனர். ஆளுநர்களுக்கு தனிப்பட்ட எந்த விருப்ப உரிமையும் இல்லை. ஆளுநரின் அதிகாரம் குறித்து அரசியல் சாசன வடிவமைப்பில் அம்பேத்கர் தெளிவாக கூறியுள்ளா். கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்துவத்தை ஆளுநர்களுக்கு உணர்த்த வேண்டும்.

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. சுமார் 4 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி இருக்கின்றனர். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை.

ஒன்றிய அரசு சர்வாதிகார திட்டத்தை நோக்கிப் பயணிக்கிறது. நாடாளுமன்றத்தை மதிக்காமல், ஆலோசனை நடத்தாமல், கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாகச் செயல்படுகிறது. சமஸ்கிருதத்திற்கு ரூ.198.98 கோடி நிதி ஒதுக்கிய நிலையில் , தமிழுக்கு ரூ.11.86 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.4 ஆண்டுகளுக்கு முன் மதுரை எய்ம்ஸ்-க்கு மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்று வரை பணிகள் தொடங்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.