மும்பையை சேர்ந்தவர் பர்சானா மிரட் வயது  32. இவர் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை பர்சானா தென்னாப்பிரிக்காவில் இருந்து  மும்பை வந்தார்.

மாலையில் குஜராத் மாநிலம், போர்பந்தரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு செல்லவிருந்தார். அன்று பர்சானாவின் திருமண நாளும் ஆகும். எனவே தாயாரை அழைத்துக் கொண்டு, மும்பையின் புறநகரில் உள்ள அந்தேரி கிழக்கு, ஜே.பி.நகரில் இருக்கும் ஒரு ஓட்டலுக்கு சென்றார்.

அங்கு 23 வயது சர்வர் நிஷாந்த் கவுடாவிடம் உணவுக்கு  ஆர்டர் செய்தார். பர்சானா பல முறை நிஷாந்திடம் அதை கொண்டு வா, அதை கொண்டு வா என்று சொல்லி கொண்டு வர  7 , 8 முறை அழைத்து ஆர்டர் கொடுக்கவே  இது நிஷாந்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

மேலும் கடைசியாக கேக் கொண்டு வருமாறு ஆர்டர் கொடுத்துள்ளார். நிஷாந்தும் கேக்கை கொண்டு வந்து கொடுத்தார். ஆனால் கேக்கை வெட்டுவதற்கு கத்தியை கொண்டு வரவில்லை.

எனவே கத்தியை கொண்டு வருமாறு நிஷாந்திடம் பர்சானா அதிகாரத்துடன்  கூற அவர் ஆர்டர் செய்த விதம் நிஷாந்துக்கு பிடிக்கவில்லை.

எனவே கத்தியை எடுத்து வந்த நிஷாந்த் அதை பர்சானாவிடம் கொடுக்கவில்லை. மாறாக பர்சானாவின் கழுத்தில் அதே கத்தியால் குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த பர்சானா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவருடைய உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

கத்தியால் குத்திய நிஷாந்தை போலீசார் கைது செய்தனர். விசாரித்த போது நிஷாந்த கல்லூரி படித்தவர் என்றும் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காத காரணத்தினால் சர்வர் ஆக நேரிட்டது என்றும் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர் என்றும் கூட வேலை பார்த்தவர்கள் தெரிவித்தனர்

இந்த செய்தி சொல்லும் சேதி என்ன என்பதை படிக்கும் நீங்களே  சொல்லுங்களேன்