சித்திரை ஆட்ட திருநாளுக்காக சபரிமலை கோயில் நடை திங்கள் அன்று திறக்கப்படுகிறது. சன்னிதானத்தில் முதன்முறையாக பெண் போலீசாரை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில், கடந்த மாதம் ஐப்பசி மாத பூஜைகளின்போது இளம்பெண்கள் ெசல்ல எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது . இதில் பத்திரிகையாளர்கள், போலீசார் உட்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். 5 நாட்கள் சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் சித்திரை ஆட்ட திருநாளை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. நாளை இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இன்றும் இளம்பெண்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சபரிமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் போன்று இம்முறையும் பெண்கள் வந்தால் பிரச்னை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கமாண்டோ படையினர் உட்பட மொத்தம் 2,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏடிஜிபிக்கள் அனந்தகிருஷ்ணன், அனில்காந்த் மற்றும் 3 ஐஜிக்கள் தலைமையில் 2,300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .

வழக்கமாக சபரிமலை நடை திறக்கப்படும்போது அன்று காலை முதலே பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவர். அதுபோல பத்திரிகையாளர்களுக்கும் எந்த தடையும் இருந்ததில்லை.

ஆனால் இந்த முறை திங்கள் அன்று மதியத்துக்கு பிறகே பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பை மற்றும் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.பத்திரிகையாளர்களும் திங்கள் அன்று காலை முதல் பம்பை செல்ல அனுமதிக்கப்படுவர். மதியத்துக்கு பிறகே நிலக்கல்லில் இருந்து பத்திரிகையாளர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவர்.

இதற்கிடையே சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக சன்னிதானத்திலும் பெண் போலீசாரை பணியில் நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை பம்பை வரை மட்டுமே பெண் போலீசார் பணியில் இருப்பது வழக்கம். தற்போது 50 வயதை கடந்த 30 பெண் போலீசாரை சன்னிதானம் செல்ல தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கலவரக்காரர்களை கண்டுபிடிக்க பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில் நிலக்கல் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பக்தர்கள் அப்பாச்சிமேடு, நீலிமலை, சரங்குத்தி வழியாகத்தான் செல்ல வேண்டும்.

தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் சுவாமி ஐயப்பன் ரோடு வழியாக செல்ல வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.3 கமாண்டோ படைகள்: சன்னிதானத்தில் ஐஜி அஜித்குமார், பம்பையில் ஐஜி அசோக் யாதவ், நிலக்கலில் டிஐஜி பிலிப் தலைமையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர ஐஜி மனோஜ் ஆபிரகாமும் சபரிமலைக்கு வந்துள்ளார். 3 கமாண்டோ படையினரும் சபரிமலைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பிரிவு நிலக்கல்லிலும், மற்றொரு பிரிவு பம்பையிலும், 3வது பிரிவு சன்னிதானத்திலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.