பொதுமக்கள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலே இனி கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக உலக அளவில் ஒரு நாள் பாதிப்பில் இந்தியா 86 ஆயிரத்திற்கு மேல் அதிகரித்து முதல் இடத்தில உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,34,339 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,749 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 31,12,669 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் அதிகபட்சமாக 86,432 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 1,089 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிலடங்கா வகையில் இருந்தாலும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த கொடிய வகை கொரோனா நோயில் இருந்து மக்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனிடையே பல மாநிலங்களில் பொது போக்குவரத்து சேவை தொடங்கியிருப்பதால் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது. அதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் படி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே விருப்பமுள்ளவர்கள், பயணம் செய்பவர்கள் என தேவைப்படுபவர்கள் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க: மூலிகை பெட்ரோல் உற்பத்தி வரும் 10ஆம் தேதி முதல் தொடக்கம்- ராமர் பிள்ளை