கொரானா சமூகம் தேசியம்

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து; 5 பேர் பலி

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் புனே சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருப்பதால் மருந்து தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இன்று (ஜனவரி 21) மதியம் தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் தீப்பிடித்துள்ளது. இதன் காரணமாக அச்சமடைந்த ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் , தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர கடும் போராட்டத்திற்குப்பின் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கப்படும் இடமான மஞ்சரி கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டபோதிலும் மருந்துகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவித்து உள்ளனர். தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதுகுறித்து காவல் துணை ஆணையர் நம்ரதா பாட்டீல் கூறியதாவது, “சீரம் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள செஸ் 3 கட்டிடத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது மாடியில் வியாழக்கிழமை மதியம் 2.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர்.

கொரோனா வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் இடத்தின் ஒரு பகுதியில் தான் தீ விபத்து ஏற்பட்டது. எனினும் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் எந்த பாதிப்பும் இல்லை.

முதன்மை தகவல்களின்படி, மூன்று பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சீரம் இன்ஸ்டிடியூட் கட்டிடத்திலிருந்து புகை வெளியேறுவதை காணொலி வாயிலாக அறியமுடிந்தது” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய தீயணைப்புப் படையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இன்ஸ்டிடியூட் வளாகத்திற்கு தீணைப்பு வண்டிகள் விரைந்துள்ளதாக தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

மருத்துவ பிரச்சனை உள்ளவர்கள் கோவாக்சின் எடுத்துக் கொள்ள வேண்டாம்‌- பாரத்‌ பயோடெக்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.