அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய அதிபர் டிரம்பின் சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்து, 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார்.

கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சனை உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார் ஜோ பைடன். இதற்குமுன் எந்த அமெரிக்க அதிபரும் பதவியேற்ற முதல் நாளில் கையெழுத்திட்ட ஆணைகளின் எண்ணிக்கையைவிட பைடன் கையெழுத்திட்ட ஆணைகளின் எண்ணிக்கை அதிகம்.

பதவியேற்ற முதல் நாளில் டிரம்ப் 8 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். ஒபாமா 9 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2 உத்தரவுகளிலும், கிளிண்டன் 3 உத்தரவுகளிலும் கையெழுத்திட்டனர்.

அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்ட முதல் முக்கிய உத்தரவுகள்: கொரோனா நோய்த் தடுப்பு விஷயத்தில் அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது, அமெரிக்க மக்கள் முகக் கவசம் அணிவது அவசியம் என்பது தொடர்பான உத்தரவில் முதலில் கையெழுத்திட்டார்.

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்பான டிரம்ப் நிர்வாகத்தின் முந்தைய உத்தரவை மாற்றி, பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். அதன்படி, பதவியேற்ற முதல் நாளிலேயே அதற்கான உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய கீஸ்டோன் எக்ஸ் எல் குழாய் அமைப்புத் திட்டத்துக்கு அளிக்கப்பட்ட அதிபர் ஒப்புதலை பைடன் திரும்பப் பெரும் உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த திட்டத்துக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பூர்வகுடி அமெரிக்கர்களும் 10 ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள்.

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்று கூறிய டிரம்ப் நிர்வாகம் அதற்கான நடைமுறைகளையும் தொடங்கியது. இப்போது அந்த நடைமுறைகள் நிறுத்திவைக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார் பைடன். இதனை ஐ.நா.தலைமைச் செயலாளர் அன்டோனியா குட்டரஸ் வரவேற்றுள்ளார்.

சில முஸ்லிம் நாடுகள் மீது டிரம்ப் விதித்த பயணத் தடைகளை பைடன் ரத்து செய்து உத்தரவிட்டார்.

அமெரிக்கா- மெக்சிகோ இடையே தடுப்புச் சுவர் கட்டும் பணிக்கு நிதி அளிக்கும் வகையில் டிரம்ப் பிறப்பித்த அவசரகால உத்தரவை பைடன் திரும்பப் பெற்றார்.

இனப்பாகுபாடு, பாலின சமத்துவம் தொடர்பான வேறு சில உத்தரவுகளையும் பைடன் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் 46வது அதிபரானார் ஜோ பிடன்.. பதவியேற்பு விழாவை புறக்கணித்த டிரம்ப்