கொரோனாவை வைத்து அரசியல் செய்வதை நிறுத்தி, மக்களை காப்பாற்ற சிந்தியுங்கள். இல்லையெனில் மூட்டைகளில் பிணங்களை அள்ளும் நிலை வரும் என்று ட்ரம்ப்-ஐ எச்சரிக்கும் உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ராஸ் அதானோம் கெப்ரியேசஸ்.

உலக அளவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 4.30 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 4,000 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,795 ஆக அதிகரித்துள்ளது

கொரோனா வைரஸை ‘சீனா வைரஸ்’ என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் விமர்சித்ததை தொடர்ந்து அமெரிக்கா-சீனா இடையே வார்த்தைப் போர் நடந்துவந்தது. இந்நிலையில் தற்போது உலக சுகாதார மையத்துடன் தனது சண்டையை துவக்கியுள்ளது அமெரிக்கா. அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாட்களாக உலக சுகாதார நிறுவனத்தை கடுமையாகச் தாக்கி பேசிவருகின்றார்.

அதில் உலக சுகாதார நிறுவனத்துக்கு பெருமளவு நிதியை அமெரிக்கா வழங்குகிறது. ஆனால் உலக சுகாதார மையம் பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. பல தவறான விஷயங்களை பேசி வருகிறது. அவர்கள் சீனாவை ஆதரிக்கிறார்கள்.

கடந்த வருடம் மட்டும் அமெரிக்கா 452 மில்லயன் டாலர் பணம் கொடுத்தோம். சீனா வெறும் 42 மில்லியன் டாலர்தான் கொடுத்தது. ஆனால் சீனாவின் பேச்சைத்தான் உலக சுகாதார மையம் கேட்கிறது நாங்கள் உலக சுகாதார மையத்திற்கு கொடுக்கும் நிதியை நிறுத்தி வைக்க முடிவு செய்து இருக்கிறோம் என்று கடுமையாக டிரம்ப் விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ராஸ் அதானோம் அளித்த பதிலில், “கொரோனா நோய்த்தொற்று மிகத் தீவிரமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. நாம் மிக மோசமான எதிரியை எதிர்கொண்டு இருக்கிறோம். இதனை விரட்டியடிக்க உலக நாடுகளுக்கிடையே ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் மிகவும் அவசியம். சீனாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்த ஆபத்தான நோய்த்தொற்றை விரட்டியடிக்க முடியும்.

ஏற்கனவே 60 ஆயிரம்திற்கும் அதிகமாகனோர் இறந்துவிட்டனர். இந்நிலையில் அரசியல் செய்வதைவிட்டு உங்கள் மக்களைக் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் மூட்டைகளில் பிணங்களை அள்ளும் நிலை வரும். கொரோனா மூலம் அரசியலில் புகழ் பெற முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

ஒரு நாட்டிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வேற்றுமையை மறந்து நாட்டின் நலனுக்காக, மக்களுக்காக ஒன்று சேருங்கள். ஒற்றுமை இல்லாவிட்டால், எந்த நாடும், எவ்வளவு சிறப்பான வசதிகள் பெற்றிருந்தாலும் நோய்த்தொற்றை ஒழிக்க முடியாது அது மேலும் மேலும் சிரமத்தை மட்டுமே கொடுக்கும்” என்று டெட்ராஸ் ஆதனாம் பதிலடி கொடுத்துள்ளார்.