காஷ்மீர் எல்லை பகுதியில் மரணம் அடைந்த குமரி ராணுவ வீரரின் உடல் இன்று அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கோழிப்போர்விளையை அடுத்த பருத்திக்காட்டுவிளையை சேர்ந்தவர் வேலப்பன் மகன் ஜெகன்(39). இந்திய ராணுவத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஹவில்தாராக பணியில் சேர்ந்தார்.

கடந்த ஜனவரி 28ம்தேதி தெற்கு சூரங்குடியை சேர்ந்த சுபி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சுபி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஜெகன் ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜெகன் விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டுச்சென்றார்.

கடந்த 8ம் தேதி பாகிஸ்தான் எல்லைப்பகுதியான பாசிலி பகுதியில் தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்துக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஜெகன் குண்டு பாய்ந்து மரணம் அடைந்தார்.

இதுகுறித்த தகவல் அன்று இரவு ஜெகனின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஜெகனின் உடல் கதுவா ராணுவ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று (11ம் தேதி) காலை ஜெகனின் உடல் டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரப்படுகிறது. அதன் பிறகு ராணுவ மரியாதைக்கு பின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ஜெகனின் மரணத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து விடுத்த அறிக்கையில் “நாட்டிற்காக உயிர் தியாகம் செய்திருக்கும் அவரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்.,

இராணுவ வீரரின் மனைவிக்கு அடுத்த வாரம் வளைகாப்பு நடைபெறவிருந்த நிலையில் கணவனை இழந்து அந்தக் குடும்பம் ஒட்டுமொத்தமாக சோகத்தில் மூழ்கியுள்ளது இதயத்தை கலங்க வைக்கிறது என்றும் .,

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ள தமிழக வீரர் ஜெகனின் குடும்பத்திற்கு உரிய நிதியுதவிகளை வழங்கி, சோகத்தின் துயரப் பிடியிலிருந்து அந்தக் குடும்பத்தை மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்றும் வலிறுத்திக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்து உள்ளார்.