முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு, கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000, 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை மற்றும் திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயணச் சலுகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உலகிலே எந்த முதல்வரும் பெற்றிராத பெருமையைக் கொண்டவர் தலைவர் கலைஞர் கருணாநிதி. தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக ஆட்சியில் அமர்ந்து, நல்லாட்சி நடத்தியவர், சீர்மிகு திட்டங்களை பார்போற்றும் வகையில் தீட்டிச் செயல்படுத்தியவர், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்றத் தலைவராக விளங்கியவர்.

பெரியாரின் சலியாத உழைப்பும், காமராஜரின் அயராத தொண்டும், அண்ணாவின் பரந்த உள்ளமும் தன்னகத்தே கொண்டிருந்தவர், உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர், தன் அரசியல் அனுபவங்கள் அனைத்தையும், அடித்தட்டில் வாழ்கிற மக்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டவர்.

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 98வது பிறந்தநாளான இன்று (3-06-2021), பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதல்வர் முக ஸ்டாலின், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தொடங்கி வைத்தார். அதில்,

“2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு 2வது கட்டமாக கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் மற்றும் கொரோனா நிவாரண உதவியாக 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கும் திட்டம்,

மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை உள்ளது போல், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணச் சலுகை வழங்கும் திட்டம்,

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், காவலர்கள் மற்றும் நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கும் திட்டம்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கும் திட்டம்,

கொரோனா காலத்திலும் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றிடும் இரண்டாம்நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை ரூ.5000 வழங்கப்படும்.

ஒருகால பூஜையுடன் இயங்கும் 12, 959 கோவில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் 14,000க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக ரூ.4,000 மற்றும் 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப்பொருட்கள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை தொடக்கி வைத்தார்.

மேலும் தென் சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில், 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்.

சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும்.

தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், ‘இலக்கிய மாமணி’ என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். இவ்விருதாளர்களுக்கு பாராட்டுப் பத்திரம் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் 16,000 டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் 54 உலர்களம் மற்றும் உலர்விப்பான்கள் அமைக்கப்படும்” உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தலைநிமிர்ந்து வருகிறேன்; வாழ்த்துக்கள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே.. மு.க.ஸ்டாலின் உருக்கம்