13 முறை சட்டமன்ற உறுப்பினர், 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7ம் தேதி இயற்கை எய்தினார். இன்று 2ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கருணாநிதி குறித்த நினைவுகளை பதிவு செய்து வருகிறார்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரை முருகன், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, கலாநிதி வீராசாமி உட்பட தலைவர்கள், தொண்டர்கள் பலரும் மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில், மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் தமிழக முதல்வராக இருந்து கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள், செய்த சாதனைகளை தற்போது ‘#எங்கெங்கும்கலைஞர்’ என்ற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவு செய்து வருகிறார்கள். அதில்,

அன்னைத் தமிழ்மொழிக்குச் செம்மொழித் தகுதி, நுழைவுத் தேர்வு ரத்து, மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ், பேருந்துகளை அரசுடைமையாக்கியது,

ஆசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கம், மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள், கோவையில் முதல் விவசாயக் கல்லூரி, வேளாண் பல்கலைக்கழகம்,

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் சட்டம், மகளிருக்கும் சொத்தில் சம பங்குண்டு என்ற சட்டம்,

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களுக்கான சமூகநீதி உரிமைகள், மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு உரிமை,

அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்காக 33% இடஒதுக்கீடு,

இஸ்லாமியச் சமூகத்தினருக்கு 3.5% இடஒதுக்கீடு, உருது பேசும் இஸ்லாமியர்களை, பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்தது,

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ரத்து,

இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மினி பஸ்கள், உழவர் சந்தைகள், சமத்துவபுரங்கள்,

கையால் இழுக்கும் ரிக்‌ஷாவை ஒழித்து, இலவச சைக்கிள் ரிக்‌ஷா வழங்கியது,

ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம், கைம்பெண் மறுமண நிதி உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் திட்டம், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு மறுவாழ்வு திட்டங்கள்,

இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்குதல், மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல், பல்லாயிரம் கோவில்களுக்கு திருப்பணிகள்,

சென்னை தரமணியில் டைடல் பார்க், சேலம் உருக்காலை, சேலம் புதிய ரயில்வே மண்டலம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம்,

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம்,

நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள், அவசர ஆம்புலென்ஸ் 108 சேவை அறிமுகம்,

வள்ளுவர் கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை, குமரி முனையில் வள்ளுவருக்குச் சிலை எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.