புதிய கல்விக் கொள்கை (NEP) 2020, கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்களை இராணுவத்தின் ஆயுதப்படை பிரிவு சிப்பாயாகக் அடையாளம் காண இது உதவும் என்று முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் கூறியதற்கு கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையின் பெரும்பான்மையான திட்டங்கள் இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிக்கும் விதமாகவும், ஏழை எளிய மாணவர்களிடமிருந்து கல்வியைப் பறிக்கும் விதமாகவும் இருப்பதாக கல்வியாளர்களும், பல்வேறு கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதேபோல் பாஜக மோடி அரசின் கொள்கை ஆதரித்து ராணுவ உயர்பொறுப்பில் உள்ளவர்கள் விதிகளுக்கு மாறாக தொடர்ந்து பேசிவருவதாக குற்றச்சாட்டும் நீடித்து வருகிறது.

இந்நிலையில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 குறித்து ஆளும் பாஜக மோடி அரசிற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக ராணுவ அகாடமியில் பேசுகையில், “அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையானது, நாட்டில் கற்றல் செயல் முறையை மாற்றும்.

ஆசிரியர்கள் இந்த மாற்றத்திற்கு தயாராக வேண்டும், முன்னணியில் இருந்து அவர்கள் தான் வழிநடத்த வேண்டும். கல்லூரி மட் டத்தில் பல்வேறு நிலை உள்நுழைவு மற்றும் வெளியேறும் திட்டங்கள் நமது இளைஞர்களுக்கு வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கும்.

மேலும் தேசிய கல்விக் கொள்கை இராணுவத்தின் ஆயுதப்படை பிரிவு சிப்பாயாக, கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்களை அடையாளம் காண உதவும்” என்று கூறியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கை நாட்டில் உள்ள நகர்ப்புற மற்றும் வசதிபடைத்த மாணவர்களுக்கு மட்டுமே உதவும் என்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், பிபின் ராவதின் சர்ச்சை கருத்துக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க: ரூ.10,000 கோடி கார்ப்பரேட் இந்துத்துவா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்…