இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த பிரபல நடிகர், நடிகை தற்போது விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. இதில் கமல்ஹாசனுடன் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபு சிம்ஹா, விவேக், என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றன.

கடந்த மாதம் இப்படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் அடுத்தகட்ட ஷுட்டிங் ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரியில் நடைபெற்றது. இதன் பின்னர் ஒரு சண்டை காட்சிக்காக போபாலில் படமாக்க உள்ளனர்.

இப்படம் பண பிரச்சனை மற்றும் கமல்ஹாசனின் கால்சீட் பிரச்சனையால் சிறிது காலம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதனால் மற்ற சில நடிகர்களின் கால்சீட் வீணாவதால் என்ன செய்வது என்று தெரியாமல் படக்குழுவினர் வேதனையுடன் தெரிவித்திருந்தனர். பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்திற்காக கொடுத்த தேதிகளில் படப்பிடிப்பு நடக்காமல் தள்ளிப்போக மறு தேதிகளை தருமாறு ஐஸ்வர்யா ராஜேஷிடம் படக்குழுவினர் கேட்டுள்ளனர். இவர்கள் கேட்ட தேதிகளில் மற்ற படங்களுக்கு கொடுத்துவிட்டதால் தேதிகளை மாற்றி தருகிறேன் எனக் கூறியுள்ளார். இதை ஏற்காத படக்குழுவினர் வேற ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்வதாக கேள்விப்பட்டு ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் இருந்து விலகி கொள்வதாகக் கூறியுள்ளார்.

மேலும் இதில் நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே. பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் தற்போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஆர்.ஜே. பாலாஜி படத்திலிருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே சில நடிகர்கள் இப்படத்தில் இருந்து விலகியதால் இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர்.ஜே. பாலாஜி விலகியது ஒட்டுமொத்த படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.