உயர் நீதிமன்றம் கல்வி சட்டம்

ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு நடப்புக் கல்வி ஆண்டில் வழங்க முடியாது; உச்ச நீதிமன்றம்

மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கவும், அதை நடப்புக் கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தவும் கோரிய மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தமிழக அரசால் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வழக்குத் தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை இறுதி செய்து அடுத்த கல்வியாண்டு (2021) முதல் அமல்படுத்துவத்துவதற்கு தமிழக அரசு அதிகாரி, மத்திய அரசு அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை நியமித்து உத்தரவிட்டது.

ஆனால், தமிழகத்தால் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50% இட ஒதுக்கீட்டை தமிழக ஓபிசி மாணவர்களுக்கு நடப்புக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக் கோரி தமிழக அரசு, திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, தமிழகத்தால் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு நடப்புக் கல்வி ஆண்டில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா என்பதை தெரிவிக்க மத்திய அரசுக்கு கடந்த 13-ம் தேதி உத்தரவிட்டது.

இதனையடுத்து, கடந்த 15-ம் தேதி பதிலளித்த மத்திய அரசு, “ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 50% அல்லது 27% இட ஒதுக்கீட்டை இறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் 2021-ம் கல்வி ஆண்டு முதல் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மட்டுமே விவாதிக்கப்பட்டதாகவும், நடப்புக் கல்வியாண்டில் (2020-2021) எந்த இட ஒதுக்கீட்டு முறையையும் அமல்படுத்த முடியாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு இன்று (அக்டோபர் 26) தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழக ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கவும், அதை நடப்புக் கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தவும் கோரிய மேல்முறையீட்டு வழக்கில் இவ்வாண்டு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிட முடியாது, என இடைக்கால நிவாரணம் கோரிய மனுவை நிராகரித்துள்ளது.

மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக; போராட்டத்தை முன்னெடுக்கும் திமுக

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.