புனேயில் உள்ள ராணுவ விளையாட்டு மைதானத்திற்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ராவின் பெயரை சூட்டி ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ஒலிம்பிக் தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் முறையாக தங்கம் வென்று கொடுத்ததால் நாடே நீரஜ் சோப்ராவை கொண்டாடியது. கோடிக்கணக்கான பணம், விலை உயர்ந்த கார்கள் என பரிசு மழையில் நனைந்தார்.

இந்நிலையில் அவரை கவுரவிக்கும் வகையில் புனேயில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தில் உள்ள மைதானத்திற்கு நீரஜ் சோப்ரா பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பெயர் மாற்றப்பட்ட விளையாட்டு மைதானத்தை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 27) திறந்து வைத்தார். விழாவில் நீரஜ் சோப்ராவும் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “விளையாட்டுகளை ஊக்குவிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். நமது பிரதமர் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க பணியாற்றி வருகிறார்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க ஒன்றிய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இந்த நடைமுறைகளில் மாநில அரசுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன” என்று கூறினார்.

பெண் என்பதால் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க அனுமதி மறுப்பு- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு