அமெரிக்காவின் எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா, ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், சோலார் சிட்டி ஆகிய நிறுவனங்களின் தலைவராக இருப்பவர் எலன் மஸ்க்.

இவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு போதிய லாபத்தை ஈட்டித் தரவில்லை. இதனால் பங்குகள் அனைத்தும் விலை மிகவும் குறைந்தது. இதையடுத்து இவர் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி டிவிட்டர் பக்கத்தில் ஒரு தகவல் வெளியிட்டார்.

அதில், டெஸ்லா நிறுவனத்தின பங்குகளை திரும்ப் பெற்று தனியார் நிறுவனம் ஆக்கப்போவதாகவும், இதற்கான நிதியுதவியை சவுதி அரசின் முதலீட்டு நிறுவனம் அளிக்கவுள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்தன. ஆனால் இந்த விலை உயர்வு நீண்ட நாள் நீடிக்கவில்லை.

பங்குகளை வாங்கியவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட கம்பெனி பற்றி தவறான தகவல் வெளியிடப்பட்டது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இத்தகவலை சவுதி முதலீட்டு நிறுவனமும் மறுத்தது. இதையடுத்து டெஸ்லா நிறுவனத்தின் தலைமை பொறுப்பேற்க எலஸ் மஸ்க்குக்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும், 20 மில்லியன் டாலர் அபராதமும், பங்குகளை திரும்ப பெறுவதற்கு 20 மில்லியன் டாலர் செலுத்தவும் எலன் மஸ்க்குக்கு உத்தரவிடப்பட்டது.

இதன் மூலம் பொய்யான தகவலை டிவிட்டரில் வெளியிட்டு முதலீட்டாளர்களை தவறாக வழி நடத்தியதற்காக அவர் மொத்தம் ₹291 கோடி (40 மில்லியன் டாலர்) பணத்தையும், அவர் தன் தலைவர் பதவியையும் இழக்க நேரிட்டது.