சவுதி அரேபியா அரசு நேற்று (12.3.2022) ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றி உள்ளதற்கு மனித உரிமைகள் அமைப்பு உள்பட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டைக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இருப்பினும், உலகின் பல நாடுகளிலும் மரண தண்டனை என்பது இன்னும் இருந்து கொண்டு தான் வருகிறது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் ஒரேநாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த 81 பேரில் 73 பேர் சவுதி நாட்டை சேர்ந்தவர்கள், 7 பேர் ஏமன் சேர்ந்தவர்கள், ஒருவர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் அதிகமான எண்ணிக்கையில் வழங்கப்பட்ட மரண தண்டனைகளில் இது பெரியதாகும்.
கடந்த 2021 ஆம் ஆண்டு 67 பேருக்கும், 2020 ஆம் ஆண்டு 27 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 81 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது சவுதி அரேபியா அரசு.
இதுகுறித்து சவுதி அரேபிய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “தீவிரவாத அமைப்பில் சேர்ந்தது, மதத்துக்கு மாறாக நம்பிக்கை கொண்டிருத்தல், அப்பாவிகள், பெண்கள், குழந்தைகளைக் கொலை செய்தல், கொள்ளை ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதில் பலர் ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா, ஹவுதி போன்ற தீவிரவாத அமைப்பில் சேர்ந்து சதிவேலையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சவுதிஅரேபியாவைச் சேர்ந்த 37 பேர் பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸாரைக் கொலை செய்த குற்றத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.
சவுதி அரேபியா ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை வழங்கியதற்கு மனித உரிமைகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசை விமர்சித்தால்கூட மரண தண்டனை அளிக்கும் சவுதி அரேபியா அரசு, அவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் கொலை செய்கிறது என குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால், எந்தவிதமான மனித உரிமை மீறல்களிலும் நாங்கள் ஈடுபடவில்லை என்று சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. மனித உரிமைஆர்வர்கள் குற்றச்சாட்டை மறுக்கும் சவுதி அரேபிய அரசு, நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.