ஒன்றிய அமைச்சகம் அனுமதி மறுத்ததால் மலையாள செய்தி சேனலான மீடியாஒன் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டதை நிறுத்தி வைத்து, ஒன்றிய அரசு பதிலளிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலையாள செய்தி சேனலான மீடியாஒன் அரசியல் டாக் ஷோ போன்றவற்றுக்காக கேரளாவில் மிகப் பிரபலமாக இயங்கி வந்தது. மாத்யமம் பிராட்காஸ்டிங் (Madhyamam Broadcasting) என்ற நிறுவனத்துக்கு சொந்தமான இந்த சேனலில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் கேரளப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர்.

இந்நிலையில் நேற்று (31.1.2022) தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட சேனல்களின் பட்டியலிலிருந்து மீடியாஒன் டிவியின் பெயர் நீக்கப்பட்டதால் அதன் ஒளிபரப்பு சேவை தடைபட்டுள்ளது.

ஒன்றிய உள்துறை அமைச்சகம் இந்த சேனலுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கவில்லை என்பதால் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சேனலின் உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளது என்று ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், சட்டபூர்வ நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாகவும், தற்போது ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீடியாஒன் தொலைக்காட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மீடியாஒன் தொலைக்காட்சி செப்டம்பர் 30, 2021 முதல் செப்டம்பர் 29, 2031 வரை உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக அந்த சேனலின் ஆசிரியர் பிரமோத் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால், இன்னும் எங்களுக்கு முறையான விவரங்கள் கிடைக்கவில்லை.

ஒன்றிய அரசு முறையான விவரங்களை எங்களுக்கு கொடுக்கவில்லை என்பதே உண்மை. தடைக்கு எதிராக நாங்கள் சட்டபூர்வ நடவடிக்கையை மேற்கொள்வோம். அந்த செயல்முறைகள் முடிந்தபின்பு சேனலின் ஒளிபரப்பு சேவை தொடங்கும். எப்போதும் நீதி வெல்லும் என்ற நம்பிக்கையில் சேனலின் ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மீடியாஒன் சேனலை தடைசெய்ததற்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.நாகரேஷ், ஒன்றிய அமைச்சகத்தின் தடை உத்தரவை இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைத்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். மேலும் ஒன்றிய அரசின் அறிவுறுத்தலை பெறுமாறு கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மீடியாஒன் தொலைக்காட்சி மீதான ஒளிபரப்புத் தடைக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, கேரளா உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திடீரென விதிக்கப்பட்ட தடையை தீவிரமான ஒன்றாக பார்க்க வேண்டும். அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்த இடம் இருக்க வேண்டும், இல்லையெனில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சதீஷ் கூறும்போது, “தொலைக்காட்சி தடையானது ஜனநாயகத்துக்கு எதிரானது. ஒளிபரப்பை நிறுத்துவதன் மூலம், விரும்பத்தகாத செய்திகளுக்கு சகிப்பின்மை காட்டும் சங்பரிவார் கொள்கையை ஒன்றிய அரசு செயல்படுத்துகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மீடியாஒன் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்படுவது இது 2வது முறையாகும். முன்னதாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் நிகழ்ந்த வன்முறையைப் பற்றிய செய்திகள் வெளியிடும் போது, கேபிள் நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்ட விதிகளை மீறியதாக கூறி, மீடியாஒன் செய்தி சேனல் ஒன்றிய அரசால் 48 மணிநேரம் தடை செய்யப்பட்டது. தற்போது மொத்த உரிமத்தையும் ஒன்றிய அரசு தடை செய்துள்ளது.