ஐஐடி சென்னை வளாகத்தில் பி.டெக். 2 ஆம் ஆண்டு படித்து வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் கேதார் சுரேஷ் தங்கும் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஐஐடி கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடுகள் காரணமாக 72% பட்டியலின மாணவர்கள் ஐஐடியில் இருந்து தங்களின் உயர் கல்வி படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர்.

அதேபோல், சென்னை உள்ளிட்ட ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிலையங்களில், தொடர்ச்சியாக மாணவர்கள் மர்மமான முறையில் தற்கொலை கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக மாணவர் சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் ஐஐடி சென்னையில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், தற்போது மற்றொரு மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷோக்லே கேதார் சுரேஷ், சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஐஐடி விடுதியில் தங்கி பி.டெக் கெமிக்கல் இஞ்சினியரிங்க் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று (21.04.2023) மாணவர் கேதார் சுரேஷ் தான் தங்கியிருந்த காவேரி தங்கும் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடன் தங்கியிருந்த மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்த மாணவன் உடலை கைபற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாணவன் சில நாட்களாக மன உளைச்சில் இருந்து வந்தது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக பிப்ரவரி மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஆய்வு மாணவர் ஐஐடி சென்னை வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் மார்ச் மாதத்தில் ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 20 வயதான மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவரும், ஏப்ரல் மாத துவக்கத்தில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 32 வயதான பிஎச்டி மாணவர் ஐஐடி சென்னை வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் ஐஐடி மாணவர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.