தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார்.
 
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சுதா சேஷய்யன் அப்பொறுப்பை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆளுநர் மாளிகைக்கு சனிக்கிழமை சென்ற சுதா சேஷய்யன், நியமன ஆணையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
 
அடுத்த ஓரிரு நாள்களில் துணைவேந்தராக அவர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் 9-ஆவது துணைவேந்தராகப் பொறுப்பு வகித்த டாக்டர் கீதாலட்சுமி கடந்த வியாழக்கிழமை ஓய்வு பெற்றார்.
 
இதனிடையே, புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக நெல்லை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் சிதி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
 
அக்குழுவிடம் துணைவேந்தர் பொறுப்புக்கு விருப்பம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கணவர் செüந்தரராஜன், டாக்டர் விமலா, டாக்டர் சுதா சேஷய்யன் உள்பட 41 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
 
அந்த விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணிகள் நிறைவடைந்து இறுதிப் பட்டியல் ஆளுநரின் பார்வைக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
 
அதனை ஆய்வு செய்த ஆளுநர், அப்பட்டியலில் இடம்பெற்றவர்களிடம் தனித்தனியே நேர்முகத் தேர்வு நடத்தியதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில் இறுதியாக சுதா சேஷய்யனை முக்கியத்துவம் வாய்ந்த அப்பதவிக்குத் தேர்வு செய்துள்ளார்.
 
தற்போது சென்னை மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வராக உள்ள சுதா சேஷய்யன், இந்திய மருத்துவக் கவுன்சிலின் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
 
இதற்கு முன்னர், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ள சுதா சேஷய்யன், மதுரை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
 
உடற்கூறியல் தொடர்பாக எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள அவர், அவை குறித்த கருத்தரங்க உரைகளையும் நிகழ்த்தியுள்ளார். அவரது மருத்துவ சேவைகளைப் பாராட்டி பல்வேறு விருதுகள் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளன.
 
ஒருபுறம் மருத்துவத் துறையில் சேவையாற்றி வரும் சுஷா சேஷய்யனுக்கு இலக்கியவாதி, ஆன்மிகப் பேச்சாளர், எழுத்தாளர் என்ற மற்றொரு முகமும் உண்டு. ஏறத்தாழ 25-க்கும் மேற்பட்ட இலக்கிய, ஆன்மிக நூல்களை அவர் எழுதியுள்ளார்.
 
குறிப்பாக, பிரிட்டானிகா தகவல் களஞ்சிய நூல்களை தமிழில் வெளிக்கொணர்ந்த பெருமை அவரைச் சாரும். இதைத் தவிர, நூற்றுக்கணக்கான சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். அவரது இந்தப் பங்களிப்பைப் பாராட்டி கலைமாமணி, சொல்லின் செல்வர் உள்ளிட்ட விருதுகளை தமிழக அரசு வழங்கி கெüரவித்துள்ளது.
 
ஆனாலலும்   ஜெயலலிதா எம்பார்மிங் விஷயத்தில் இவரின் பேட்டி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இவர் அறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஆஜராகியது குறிப்பிடதக்கது