தனது கருத்துகளைத் திரும்பப் பெறவோ அல்லது மன்னிப்பு கேட்கவோ விரும்பவில்லை என உச்சநீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக நடிகர் குணால் கம்ரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் நாயக்கை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட 3 பேரும், 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் அலிபாக் செசன்ஸ் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரும் மனு தாக்கல் செய்து, ஜாமின் மறுக்கப்பட்டது.

இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம், அர்னாப் கோஸ்வாமியை உடனடியாக விடுவிக்க இடைக்கால ஜாமீன் வழங்கியது.

மேலும் தீர்ப்பில், அன்வாய் நாயக்கை அர்னாப் நேரடியாக தற்கொலைக்குத் தூண்டவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டது சர்ச்சையை எழுப்பியது.

இந்நிலையில், அர்னாப் ஜாமீன் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பிரபல பாலிவுட் காமெடி நடிகர் குணால் கம்ரா, தனது பதிவில், “நாட்டின் மிக உயர்ந்த உச்சநீதிமன்றம் மிக உயர்ந்த நகைச்சுவையாகிவிட்டது.

தேசிய நலன்கள் விஷயங்களில் உச்சநீதிமன்றம் செயல்படும் வேகத்தைப் பார்க்கையில் விரைவிலேயே மகாத்மா காந்தியின் புகைப்படம் மாற்றப்பட்டு, அந்த இடத்தில் வழக்கறிஞர் ஹரிஷ்சால்வேயின் புகைப்படம் இடம் பெறும் என நினைக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் காவி நிறத்தில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் பாஜக கொடி பறப்பது போல உள்ள புகைப்படம் ஒன்றை குணால் கம்ரா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையையும் எழுப்பியது.

 

இதனையடுத்து குணால் கம்ராவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கோரி அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. அதனடிப்படையில், குணாலின் ட்வீட்கள் காமெடிக்கும், நீதிமன்ற அவமதிப்பிற்குமான எல்லையை கடந்திருப்பதாக குறிப்பிட்ட அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், குணால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் இதுதொடர்பாக நடிகர் குணால் கம்ரா எழுதியுள்ள கடிதத்தில், அன்புள்ள நீதிபதிகள், திரு கே.கே.வேணுகோபால்,

நான் சமீபத்தில் வெளியிட்ட ட்வீட்டுகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. நான் ட்வீட் செய்ததெல்லாம் இந்திய உச்சநீதிமன்றம் ஒரு பிரைம் டைம் ஒலிபெருக்கிக்கு ஆதரவாக ஒரு பகுதி முடிவை வழங்குவதைப் பற்றிய எனது பார்வைதான் இது.

எனது ட்வீட்களைத் திரும்பப் பெறவோ அல்லது மன்னிப்பு கேட்கவோ நான் விரும்பவில்லை. எனது அவமதிப்பு மனுவின் விசாரணைக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை தன்னார்வத் தொண்டு செய்ய விரும்புகிறேன். அதுவும் குறைந்தபட்சம் 20 மணிநேரம், பிரசாந்த் பூஷனின் விசாரணை வரிசையில் இடம் பெறுவதால், நான் அதிர்ஷ்டசாலி.

இன்னும் பல மனுவையும் நான் பரிந்துரைக்கிறேன். குறிப்பாக ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பாக மனு, தேர்தல் பத்திரங்களின் சட்டபூர்வமான விஷயம் மற்றும் தகுதியான எண்ணற்ற பிற விஷயங்கள் பேசுகிறேன்.

எனது ஒரு ட்வீட்டில் இந்திய உச்சநீதிமன்றத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை ஹரிஷ் சால்வேவுடன் மாற்றுமாறு கேட்டுக் கொண்டேன். பண்டிட் நேரு புகைப்படத்தையும் மகேஷ் ஜெத்மலானியுடன் மாற்ற வேண்டும் என்று சேர்க்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகள் இருப்பதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

40 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான ஜிடிபி சரிவு- ஆர்பிஐ எச்சரிக்கை