தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். அவர் தூத்துக்குடி குறிஞ்சிநகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். இந்த வீட்டின் ஒரு பகுதியில் அலுவலகமும் செயல்பட்டு வந்தது.
 
கனிமொழி நேற்று தனது பிரச்சாரத்தை முடித்து விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். அங்கு அவர் கட்சிக்காரர்களுடன் தேர்தல் பணிகள் குறித்து விவாதித்து கொண்டிருந்தார்.
 
அப்போது திடீர் என இரவு 8 மணியளவில் 10 பேர் கொண்ட வருமான வரித் துறை படையினர் அங்கு வந்தனர்.வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த அவர்கள், எல்லோரையும் வெளியேற்றி வீட்டு கதவை மூடிவிட்டு சோதனை நடத்தத் தொடங்கினர். அப்போது கனிமொழியின் செல்போனையும் பறித்து கொண்டனர்.
 
இந்த தகவல் காட்டுத்தீ போல பரவி, தி.மு.க. தொண்டர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடிக்கு எதிராகவும், தேர்தல் கமிஷனுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியே இரவிலும் பரபரப்பாக காணப்பட்டது. இந்த நிலையில் வருமான வரித் துறையினரின் சோதனை இரவு 11 மணி வரை நீடித்தது.
 
இதன்பின், வருமான வரித் துறையினர் வெளியேறும் போது அவர்களுக்கு எதிராக தி.மு.க. தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
 
வருமான வரி சோதனை முடிந்ததும் வீட்டில் இருந்து வெளியே வந்த கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
எங்களை பயமுறுத்துவதற்காகவே தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை குறிவைத்து இந்த சோதனைகளை நடத்துகிறார்கள்.
 
மோடி எதிர்க்கட்சிகளை பயமுறுத்த வருமான வரித் துறையை பயன்படுத்துகிறார். தோல்வி பயத்தில் இந்த வேலைகளை செய்கிறார்கள்.
 
என் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என்று கூறியதும், அதற்கான முறையான ஆவணங்களை கேட்டோம். ஆனால் அவர்கள் எதையும் தரவில்லை.
 
இருந்தாலும் வருமான வரி சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். ஒரு மணி நேரமாக வீடு முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. தவறான தகவலால் சோதனை நடத்தியதாக அவர்களே ஒப்புக்கொண்டனர்.இவ்வாறு கனிமொழி கூறினார்.