தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி 5 சிறுவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லம் நோக்கி 30 கி.மீ. தூரம் நடைப்பயணம் மேற்கொண்டனர்.

நாட்டில் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார இழப்பை சமாளிக்க, தமிழகத்திற்கு அதிக வருவாயை கொடுக்கும் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளன. அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

45 நாட்களுக்கு குடிக்காமல் இருந்ததால் குற்றங்கள் குறைந்தன. இதனால் மதுப்பிரியர்களின் பிள்ளைகளும் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருந்தனர். மேலும் கூலித் தொழில் செய்வோரின் குழந்தைகளும் உணவில்லாததற்கு வருந்துவதை காட்டிலும் தங்கள் தந்தைமார்கள் குடிக்காமல் இருப்பதை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் சென்னையை தவிர தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது.

மேலும் வாசிக்க: நாளை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் திமுக கூட்டணி கட்சிகள்

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்ற கோரிக்கை விடுத்து ஆகாஷ், விஷ்டோரியா, ஆதர்ஷ், சபரி, சுப்ரியா ஆகிய 5 சிறுவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லம் நோக்கி நடந்து செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கேளம்பாக்கத்தை அடுத்துள்ள படூரில் இருந்து 30 கி.மீ. தூரம் வரை நடந்தே சிறுவர்கள் நடைப்பயண போராட்டத்தை தொடங்கினர்.

“குடியை விடு, படிக்க விடு” என்ற பதாகைகளை கைகளில் ஏந்தியும், பள்ளிப் புத்தகப் பையையும் சுமந்துகொண்டு சென்றனர். இவர்கள் முதல்வர் வீட்டை நோக்கி ஓ.எம்.ஆர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சென்னை கண்ணகி நகர் காவலர்கள் சிறுவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களை போலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

சிறுவர்களின் இந்த போராட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் சிறுவர்களின் இத்தகைய போராட்டத்திற்கு வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்ககூடாதென ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதன்படி, தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை இல்லை. சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகள் செயல்படலாம்.

மதுக்கடைகளில் நேரில் சென்று வாங்குபவர்களுக்கு ஒரு நாளில் ஒரு பாட்டிலுக்கு மட்டுமே அனுமதி. ஆன்லைனில் மதுபானங்கள் விற்க ஐகோர்ட் அனுமதி உண்டு. ஆனால் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 2 பாட்டில்கள் மட்டுமே விற்க வேண்டும். மேலும் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் அந்த மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்படும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.