தங்களுக்கு நிலுவையில் உள்ள ஊதிய பாக்கியை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் இல்லத்தை முற்றுகையிட்ட நியாய விலைக் கடை ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் 336 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் 580 க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 55 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம்பள பாக்கி உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி நியாய விலைக் கடை ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். மேலும் இதுதொடர்பாக அரசோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், நிலுவை சம்பளம் கொடுக்கப்படும் என உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (19.03.2023) தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சரை சந்தித்து முறையிடுவதற்காக ஏராளமான ஊழியர்கள் திரண்டு முதலமைச்சர் ரங்கசாமி வீட்டை முற்றுகையிட்டு வாசலில் அமர்ந்தனர்.

அப்பொழுது முதலமைச்சர் ரங்கசாமி தனது இல்லத்தில் இருந்த மைதானத்தில் இறகு பந்து விளையாடிக் கொண்டிருந்தார். அவர் வரும் வரை நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அவர் வீட்டு வாசலில் அமர்ந்து காத்திருந்தனர். அரை மணி நேரம் விளையாடி முடித்துவிட்டு வந்த முதலமைச்சரிடம் 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறோம்.

தற்போது எங்களுக்கு நிரந்தர வேலையும் இல்லை, சம்பளமும் வழங்கவில்லை. எனவே நியாய விலைக் கடைகளை திறக்க வேண்டும், நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

ஆனால் தான் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் தான் ஆகியுள்ளது, கோரிக்கைகளை ஒவ்வொன்றாகத்தான் நிறைவேற்ற முடியும், உடனடியாக எதையும் செய்ய முடியாது என்று ஊழியர்களுக்கு முதல்வர் பதில் அளித்துவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டார்.

இருப்பினும் ஊழியர்கள் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்து அமர்ந்து இருந்ததால், காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அங்கிருந்து சென்றவர்கள் புதுச்சேரி, திண்டிவனம் சாலையில் கோரிமேட்டில் சாலை மறியல் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் அவர்களை கைது் செய்தனர்.

ஏற்கனவே இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மருத்துவமனை மேலே ஏறி நின்று தற்கொலை முயற்சி போராட்டம் நடத்தினர். அன்று மாலை அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்து அதற்கான உத்தரவை வழங்கினார் முதலமைச்சர் ரங்கசாமி.

இதேபோன்று பல்வேறு துறைகளில் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கும் ஊழியர்கள் இதுபோன்ற போராட்டங்கள் மூலம் பணி நிரந்தரம் பெற்று விடலாம் என்று எண்ணத்தில் தற்போது புதுச்சேரி முழுவதுமே போராட்டக் களமாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.