உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் பனிப்பாறைகள் சரிந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 170 பேர் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் திரிவேந்திரசிங் ராவத் அறிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனி உருகி நீராக பெருக்கெடுத்து அருகேயுள்ள தவுளிகங்கா ஆற்றில் கலந்தது. இதனால் தவுளிகங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

உத்தரகண்டின் தபோவன் பகுதியில் ரெய்னி கிராமத்தில் அமைந்துள்ள தேசிய அனல்மின் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால், தொழிலாளர்கள் 170 பேர் வரை சிக்கி கொண்டனர். இந்த வெள்ளப்பெருக்கில் 100 முதல் 150 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நந்திதேவி பனிக்குன்று உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய பாதுகாப்பு மீட்பு படை குழு அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் துரித படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை, 8 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. உத்தரகண்ட் வெள்ள மீட்பு பணியில் மாநில அரசுக்கு உதவுவதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்துள்ளார். டெல்லியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் உத்தரகாண்ட் விரைந்துள்ளனர்.

இந்நிலையில் உத்தரகண்டில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் வெள்ளத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் ன பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதனிடையே வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் திரிவேந்திரசிங் ராவத் தெரிவித்துள்ளார்.

12கி முதல் 60கி வரை எடை கொண்ட 100 செயற்கைக்கோள்கள்.. மாணவர்கள் அசத்தல்