பரப்புரை செய்யவோ விளம்பரப்படுத்திக் கொள்வதற்கோ உகந்த நேரம் அல்ல. உயிருக்கும் – எதிர்காலத்திற்கும் போராடும் இந்திய மாணவர்களைக் காப்பாற்றுங்கள் என்று ஒன்றிய மோடி அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 7-வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் ரஷ்யா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யப் படைகள் சுற்றிவளைத்திருப்பதாகவும் ஏவுகனை தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு மிகப் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

மேலும் போர் நடைபெறும் உக்ரைனில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் மரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் தவிக்க விடப்பட்டுள்ளனர்.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால், இந்திய மாணவர்கள் நாடு திரும்புவதற்காக கார்கிவ் நகரில் இருந்து வெளியேறி ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய மோடி அரசை வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள் என்று கேள்வி கேட்க பாஜக.வுக்கு இதுவா நேரம்?

பரப்புரை செய்யவோ விளம்பரப்படுத்திக் கொள்வதற்கோ உகந்த நேரம் அல்ல. உயிருக்கும் – எதிர்காலத்திற்கும் போராடும் மாணவர்களைக் காப்பாற்றுங்கள்.

இந்த இக்கட்டான நேரத்தில் உக்ரைனில் சிக்கியுள்ள நமது மாணவர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் தவிக்க விடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் வேதனையளிக்கின்றன.

இந்திய குறியுரிமை பெற்றுள்ள இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் பொறுப்பாகும். பிரதமர், தமது அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் தேவையற்ற கருத்துகளை வெளியிடுவதைத் தடுத்து, இந்தியர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்யும் நம் இலக்கு வெகு தொலைவில் இல்லை. நமது குரல் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இது ஒட்டுமொத்தமான இந்தியாவின் குரலாக மாறும்!
அனைவரும் இணைந்து போராடி வெல்வோம்!” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.