‘நாங்கள் மத்திய அரசுடன் ஒத்துழைத்து வருகிறோம். ஆனால், நீங்கள் ஏன் அரசியல் செய்கிறீர்கள்’ என்று கொரோனா விவகாரத்தை மத்திய அரசு அரசியலாக்கி வருவதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு, பிரதமர் மோடி 5-வது முறையாக, அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் வாசிக்க: மே 31ம் தேதி வரை ரயில், விமான சேவைகள் வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, நாங்கள் மத்திய அரசுடன் ஒத்துழைத்து வருகிறோம். ஆனால், நீங்கள் ஏன் அரசியல் செய்கிறீர்கள். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். ஆனால், மேற்கு வங்கத்தை ஏன் மத்திய அரசு தாக்குகிறது, என்று கேள்வி எழுப்பினார்.

கூட்டாட்சி அமைப்பை சுட்டிக்காட்டிய மம்தா பானர்ஜி, பொது முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் பிற சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கும் முன் மாநிலங்களுடன் பேசுமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார்.

கொரோனா பிரச்னை தொடங்கிய மார்ச் மாதத்தில் இருந்து மத்திய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே சர்ச்சைகள் வலுத்துவருகிறது. மத்திய அரசின் சிறப்புக்குழு மேற்கு வங்கத்தில் ஆய்வு நடத்துவதற்கு மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அனுமதிபெறாமல் விசாரணை நடத்துவதாக மத்தியக்குழு மீது குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, பிரதமருக்கு கடிதம் எழுதினார். கொரோனாவுக்கு எதிராக மாநில அரசு தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், மத்திய சிறப்புக்குழுவின் அவசியம் என்ன என மம்தா கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் மாநிலங்களின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்தது.

மேற்கு வங்கத்தில் கொரோனா சோதனைகள் நடத்துவதற்கு போதிய வசதிகள் இல்லை என்றும், கொரோனா பாதித்தவர்களை கண்காணித்தல், பரவுதலை கண்காணித்தல் போன்றவற்றில் மேற்கு வங்கம் பின்னடைவாக உள்ளதென்றும் சிறப்புக்குழு விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.