தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்த பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் முதல் நடைபெறும். ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும்.

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2-ம் தேதி நடைபெறும். மேலும், மார்ச் மாதம் 24ஆம் தேதி போக்குவரத்து இல்லாததால், 36,842 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதச் செல்லமுடியவில்லை. அந்த மாணவர்களுக்கும் ஜூன் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும், என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: மே 31ம் தேதி வரை ரயில், விமான சேவைகள் வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய செங்கோட்டையன், தேர்வு எழுதிய +2 மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்துவதற்கான பணிகள் 27ஆம் தேதி முதல் தொடங்கும். இந்தப் பணிகளின்போது சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு, தேர்வுகளுக்கான தேதி குறித்து மட்டுமே தற்போது முடிவு செய்யப்பட்டிருக்கிறது, மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்கும் தேதி குறித்து எந்த முடிவும் செய்யப்படவில்லை, என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவருக்கும் பேருந்து வசதி செய்து தரப்படும். மாணவர்களை அழைத்துவந்து மீண்டும் கொண்டு போய் சேர்க்க பேருந்து வசதி செய்து தரப்படும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வராத தற்போதைய சூழலில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.