தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகனுக்கு பால்வளத்துறை, மீன்வளத்துறை, விலங்குகள் நலத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறையின் ஒன்றிய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

2வது முறையாக 2019 மே மாதம் பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முதல் முறையாக மாற்றியமைக்கப்பட்டது. 7-7-2021 தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் 7 பெண்கள் உள்பட 43 பேர் ஒன்றிய அமைச்சர்களாகப் பதவியேற்றனர். பிரதமர் மோடி முன்னிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்தது. அப்போது, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வென்ற பொன்.ராதாகிருஷ்ணன், ஒன்றிய இணை அமைச்சரானார். 2019 மக்களவைத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். அதன்பின் தமிழகத்திலிருந்து பாஜகவுக்கு ஒரு எம்பி கூடத் தேர்வாகவில்லை.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நிர்மலா சீதாராமன் ஒன்றிய நிதியமைச்சர், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அமைச்சர் என்று முக்கியத் துறைகளின் அமைச்சர்களாக இருந்தாலும், அவர்கள் தமிழ்நாட்டின் பிரதிநிதிகளாகக் கருதப்படவில்லை.

இந்நிலையில், ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தில் எல்.முருகனுக்கு ஒன்றிய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எல்.முருகனுக்கு தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், பால்வளம், கால்நடைத் துறை ஆகிய இலாகாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

எல்.முருகனின் ஆர்எஸ்எஸ் முதல் இணை அமைச்சர் வரை பயணம்..

ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியர் ஸ்ரீகணேசன் அறிமுகத்தால் அரசியலில் நுழைந்து, ஒன்றிய அமைச்சராக உயர்ந்துள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன். 1977 மே 29-ல் நாமக்கல் மாவட்டம் கோனூரில் பிறந்தவர்.

பள்ளியில் படிக்கும் போது அவரது கிராமத்துக்கு ஆர்எஸ்எஸ் கிளையான ஷாகா தொடங்க வந்த அந்த அமைப்பின் முழுநேர ஊழியர் ஸ்ரீகணேசனின் அறிமுகம் கிடைத்தது. அதன் மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது.

சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும்போது ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தில் (ஏபிவிபி) இணைந்து, அதன் மாநில துணைச் செயலராக செயல்பட்டார். முதுநிலை சட்டப் படிப்பு முடித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சியைத் தொடங்கிய முருகன், சில ஆண்டுகள் சுவாமி தயானந்த சரஸ்வதி நிறுவிய ‘தர்ம ரக்ஷண சமிதி’ அமைப்பில் இணைந்து செயல்பட்டார்.

பின்னர் பாஜகவில் இணைந்த எல்.முருகன், 2009 ஆம் ஆண்டு பாஜக எஸ்.சி. அணி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். பாஜக சார்பில் ராசிபுரம் (தனி), சங்கரன்கோவில் (தனி) தொகுதிகளில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் தற்போது அவர் ஒன்றிய இணை அமைச்சராகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எல்.முருகன் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும், தமிழ்நாட்டிலிருந்து எல்.முருகன் எம்பி.யாக வாய்ப்பு இல்லாததால், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஒன்றிய அமைச்சரின் மனைவி கிட்டி குமாரமங்கலம் கொலை