உணவு வினியோகிக்கும் நிறுவனங்கள் 25% வரை கட்டண உயர்வு மூலம் கூடுதல் பணம் வசூலிப்பதாகவும், இது தொடர்பாக விசாரித்து, உணவு வினியோக நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது.

தற்போதுள்ள அவசரமான உலகில் கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு செல்பவர்களாக இருப்பதால், வேலை முடிந்து வரும் அவர்கள் வீடுகளில் சமைப்பதற்கு பதில், உணவுகளை வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து உண்ணும் பழக்கம் அதிகரித்துவிட்டது.

இதற்காகவே தொடங்கப்பட்ட சுவிக்கி, ஜோமேட்டோ உள்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் உணவு ஆர்டர் செய்வதற்காக தனி செயலிகளை தொடங்கி அதன்மூலம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று உணவு பொருள்களை விநியோகித்து வருகிறார்கள்.

இந்த செயலிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெரு நகரங்களில் இதுபோன்ற உணவு பொருள் வினியோகிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு வீடுகளுக்கே சென்று உணவு வினியோகிக்கும் நிறுவனங்கள் உணவு பொருளின் விலையுடன் சேவைக்கட்டணம் மற்றும் வினியோக கட்டணம் ஆகியவற்றையும் சேர்த்து வாங்கி கொள்ளும். அதாவது சென்னையில் ஒரு சிக்கன் பிரியாணியின் விலை ரூ.150 என்றால், அதனை உணவு வினியோக நிறுவனம் மூலம் வாங்கினால் அதற்கு வாடிக்கையாளர் ரூ. 200 செலுத்த வேண்டும்.

இந்த கூடுதல் கட்டணம் சேவை வரி மற்றும் வினியோக வரி என்ற வகையில் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த கூடுதல் கட்டணத்தை உணவு வினியோக நிறுவனத்தினர் தனித்தனியாக பிரித்து காட்டுவதில்லை. மொத்தமாக பில்லில் குறிப்பிட்டு இருப்பார்கள். இதனால் வாடிக்கையாளரிடம் இருந்து எவ்வளவு பணம் கூடுதலாக வாங்கப்படுகிறது என்பது வாடிக்கையாளருக்கு தெரியாது.

இந்நிலையில் உணவு வினியோக நிறுவனங்கள் இப்போது டெலிவரி கட்டணத்தை ரூ.2 உயர்த்த உள்ளனர். இதுபோல உணவு வினியோக நிறுவனத்தின் உறுப்பினர் கட்டணத்தையும் அதிகரிக்க உள்ளனர். இக்கட்டணங்கள் அதிகரிக்கும் போது இப்போது வாங்கும் விலையை விட உணவு பொருள்களின் விலை 25 சதவீதம் வரை அதிகரிக்கும்.

அதாவது உணவு வினியோக நிறுவனங்கள் மூலம் வாங்கும் பொருள்களுக்கு தான் இந்த விலை உயர்வு. இதனையே நாம் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டால் இந்த விலை உயர்வு இருக்காது. இதுபோல உணவு வினியோகிக்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை உறுப்பினர்களாகவும் சேர்த்துள்ளனர். இதற்காக மாதத்திற்கு ஒரு கட்டணமும் வசூலிக்கிறார்கள்.

உறுப்பினர்களாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கு உணவு வாங்கினால் சலுகை வழங்குவதாக கூறியிருப்பார்கள். அந்த சலுகையை பெற வாடிக்கையாளர் தனது தேவைக்கு அதிகமான உணவை ஆர்டர் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

இவ்வாறு உணவு வினியோகிக்கும் நிறுவனங்கள் கட்டண உயர்வு மூலம் கூடுதல் பணம் வசூலிப்பதாகவும், இதனை வாடிக்கையாளர்களுக்கு உரிய முறையில் தெரிவிப்பதில்லை என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

எனவே அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்து உணவு வினியோக நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களுக்கான விலையை முறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.