செயற்கை நுண்ணறிவின் தந்தையாகக் கருதப்படும் டாக்டர் ஜெஃப்ரி ஹின்டன், செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்படும் முன்னேற்றங்கள் பின்னாளில் பெரும் ஆபத்துகளை விளைவிக்கும் என எச்சரித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதில் இருந்து இணையஉலகம் Chat GPT-யை பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.

Chat GPT மென்பொருள் செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும். இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பதில்களையும் Chat GPT-யால் தரமுடியும். அதிலும் கல்வி நிலைய பயன்பாடுகளில் கடிதம் முதல் கட்டுரை வரை அனைத்தையும் இதனால் செய்யமுடியும்.

சுமார் 100 மொழிகளில் Chat GPT மென்பொருள் தற்போது கிடைக்கிறது என்றாலும் ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் இதன் திறன் சிறப்பாக இல்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் கூகிள் போன்ற பல்வேறு நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு குறித்த ஆய்வில் இறங்கியுள்ளதால் விரையில் அதன் தரம் பெரிய அளவில் உருவாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவின் தந்தையாகக் கருதப்படும் ஜெஃப்ரி ஹின்டன் செயற்கை நுண்ணறிவு குறித்து அச்சம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு தற்போதைய நிலையில் மனிதர்களை விட புத்திசாலிகளாக இல்லாவிட்டாலும், விரைவில் அவை நம்மை விட புத்திசாலிகளாக மாறும்.

தற்போதைய நிலையில் GPT-4 போன்ற செயற்கை மென்பொருள்கள் மனிதனை மிஞ்சும் பொது அறிவுடன் உள்ளன. தற்போது அவற்றிடம் மனிதர்களுக்கு இருக்குமளவுக்குப் பகுத்தறிவு இல்லாவிட்டாலும் தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் முன்னேற்றம் காரணமாக விரைவில் அந்த மென்பொருள்கள் போதுமான பகுத்தறிவைப் பெற்றுவிடும். அப்போது அவற்றை பற்றி நாம் கவலைப்பட வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், மனிதர்களின் புத்திசாலித்தனத்தை விட வேறு வகையான புத்திசாலித்தனத்தை நாம் உருவாக்கி வருகிறோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும், நாம் உயிருடன் வாழும் மனிதர்களாக இருக்கும் போது, இந்த மென்பொருட்கள் பயன்படுத்தப்படும் இடங்கள் அதே அறிவுடன் கூடிய வெறும் இயந்திரங்களாக இருப்பதே இவற்றிற்கும் நமக்குமான வித்தியாசம் என்றும் அவர் கூறினார்.

இந்த மென்பொருட்களுடன் கூடிய பல ஆயிரக்கணக்கான இயந்திரங்கள் உருவாக்கப்படும் போது, அவை அனைத்தும் தனித்தனியாக ஏராளமான தகவல்களை உள்வாங்கினாலும், அவை ஒவ்வொன்றும் அனைத்துத் தகவல்களையும் கிரகிக்கும் என்பதால் தான் மனிதர்களை விட புத்திசாலிகளாக அவை மாறிவிடும் ஆபத்து உள்ளது என்றும், இது 10,000 பேர் தனித்தனியாக பல தகவல்களைத் தெரிந்து கொள்ளும் போது, அந்தத் தகவல்கள் அனைத்தையும் அவர்கள் அனைவரும் அறிந்து கொள்வதைப் போன்றது என்றும் டாக்டர் ஹின்டன் கூறினார்.

மேலும் கூகுள் நிறுவனத்தில் இருந்து தான் விலகிவிட்டதாகத் தெரிவித்த டாக்டர் ஜெஃப்ரி ஹின்டன், தனது பணி குறித்து தற்போது வருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். கூகுளில் தான் பணியாற்றாவிட்டால் அந்நிறுவனம் அதிக அளவில் நம்பத்தகுந்த நிறுவனமாக இருக்கும் என்று தெரிவித்த அவர், கூகுளை அதிகமாக விமர்சிக்க விரும்பவில்லை என்றும், ஆபத்தான செயற்கை நுண்ணறிவை உருவாக்காமல் இருப்பதில் அந்நிறுவனத்துக்கு அதிக பொறுப்புகள் இருப்பதாகவும் டாக்டர் ஹின்டன் தெரிவித்துள்ளார்.