உலகம் வணிகம் வர்த்தகம்

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் இடத்தை இழந்தார் முகேஷ் அம்பானி

2020 ஆம் ஆண்டின் கடைசி நாளில் சீனாவின் ஜாங் ஷான்ஷான் என்பவரால் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை இழந்து, உலக டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார் முகேஷ் அம்பானி.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2020 ஆம் ஆண்டு மிகப்பெரிய மாற்றங்கள் எதிர்கொண்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு, முகேஷ் அம்பானி நிறுவனத்தின் பங்குகளின் விலை தொடர் வீழ்ச்சி கண்டது.

இதனால் 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ள முகேஷ் அம்பானி 2020 ஆம் ஆண்டின் கடைசி நாளில் சீனாவின் ஜாங் ஷான்ஷான் என்பவரால் 12 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார். இது மட்டும் அல்லாமல் முகேஷ் அம்பானியின் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்தையும் ஜாங் ஷான்ஷான் தட்டி சென்று உள்ளார்.

6 ஆம் வகுப்பு மட்டுமே பிடித்த ஜாங் ஷான்ஷான், 12 வயது முதல் கட்டிட வேலை, சேல்ஸ்மேன் எனப் பல சின்ன வேலைகளைச் செய்து தனி ஆளாக வளர்ந்தவர். 1996ல் இவர் துவங்கிய நோங்பூ ஸ்பிரிங் என்ற பாட்டில் தண்ணீர் மற்றும் குளிர்பான நிறுவனம் ஒவ்வொரு வருடமும் நிலையான வளர்ச்சி அடைந்து இன்று சீனாவின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனமாக உயர்ந்துள்ளது.

இதோடு ஜாங் ஷான்ஷான் மருந்து துறையிலும் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைக் கொண்ட வான்டாய் என்னும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 2020 கொரோனா காலத்தில் மக்கள் சுகாதாரத்திற்கு அதிகளவிலான முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால் ஜாங் ஷான்ஷான் நிறுவனத்தின் பாட்டில் தண்ணீர் வர்த்தகம், மருந்து வர்த்தகமும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.

ஜாங் ஷான்ஷான் எந்த அரசியல் தொடர்பும் இல்லாமல், சீனாவின் மிகப்பெரிய வர்த்தகமாக இருக்கும் ரியல் எஸ்டேட், டெக் போன்ற துறைகளில் இல்லாமல் தனித்தொரு துறையில் வர்த்தகத்தைத் துவங்கிச் சாதித்துள்ளார். 2020ல் சீனாவின் பல டெக் மற்றும் ரியல் எஸ்டேட் பில்லியனர்களைப் பின்னுக்குத்தள்ளி சீனா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக உயர்ந்துள்ளதற்காகவே இவரைச் சீனாவில் ‘Lone Wolf’ என அழைக்கப்படுகிறார்.

2020க்கு முன்பு ஜாங் ஷான்ஷான் பெரிய அளவில் பிரபலம் இல்லாத நிலையில் இந்தத் திடீர் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது ஐபிஓ. நோங்பூ ஸ்பிரிங் பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பின்பு 155% சதவீதமும், வான்டாய் பயோலாஜிக்கல் பார்மஸி நிறுவனம் சுமார் 2000 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இதனால் ஜாங் ஷான்ஷான் 2020ல் 70.9 பில்லியன் டாலர் உயர்ந்து மொத்த சொத்து மதிப்பு 78.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த அதிரடி வளர்ச்சியின் காரணமாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஜாங் ஷான்ஷான் 11வது இடத்தைப் பிடித்துள்ளார். ஜாங் வளர்ச்சியினாலும் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு சரிவினாலும் 12வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் முகேஷ் அம்பானி.

குஜராத்தில் 250 ஏக்கரில் மிருகக் காட்சி சாலை அமைக்கும் ரிலையன்ஸ்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.