நெட்ஃபிக்ஸ் தயாரிப்பில் அவெஞ்சர்ஸ் இயக்குனர் இயக்கும் ஹாலிவுட் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக நெட்ஃபிக்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா படங்களை இயக்கிய ரஸ்ஸோ சகோதரர்களின் அடுத்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை பெரும் பொருட் செலவில் நெட்ஃபிக்ஸ் தயாரிக்கிறது.

‘The Gray Man’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ரையான் கோஸ்லிங், க்ரிஸ் இவான்ஸ், ஜெஸ்ஸிகா ஹென்விக் உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படத்தில், தனுஷ் மட்டுமே ஒரே இந்திய நடிகராக உள்ளார்.

2009ஆம் ஆண்டில் அமெரிக்க நாவலாசிரியரான மார்க் கிரேனியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு The Gray Man கதை உருவாக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படும் இப்படம், நெட்ஃபிக்ஸ் தயாரித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இருக்கும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

தனுஷ் 2018ல் வெளிவந்த The Extraordinary Journey of the Fakir படத்தின் மூலம் ஹாலிவுட்டிற்கு அறிமுகமானவர். The Gray Man தனுஷின் இரண்டாவது ஹாலிவுட் திரைப்படம். கோர்ட் ஜென்ட்ரி என்ற முன்னாள் சிஐஏ உளவாளியின் சாகசம்தான் இந்த The Gray Man நாவல்.

முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. இதில் ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் நடிக்கும் ‘கர்ணன்’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. அதனையடுத்து தற்போது ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் ‘அட்ரங்கி ரே’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை திரைப்படம் விரைவில்..