அலோபதி மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள், உண்மையில் மருத்துவர்கள் பூமிக்குக் கிடைத்த ஆசீர்வாதம் என்று திடீரென பல்டியடித்துள்ளார் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ்.

பதஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவ், பாஜக ஆதரவாளராக தன்னை முன்னிறுத்தி வருகிறார். அதேபோல் பதஞ்சலி நிறுவனத்தை பாஜக அரசு அதிகளவில் விளம்பரப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா முதல் அலையின் போது உலகமே தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இயங்கி வந்த வேளையில், கொரோனா வைரஸை எதிர்க்கும் எனக் கூறி கொரோனியல் என்ற மருந்தை அறிமுகம் செய்தார் பாபா ராம்தேவ்.

இவரின் இந்த மருந்துக்கு ஒன்றிய பாஜக அரசு ஒப்புதல் கொடுத்து ஒன்றிய அமைச்சர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். இதற்கு மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புகளையும், கேள்விகளையும் எழுப்பியதைத் தொடர்ந்து கொரோனியல் மருந்து தடை செய்யப்பட்டது.

தற்போது கொரோனா இரண்டாவது அலையில் மக்கள் பெரிதும் பாதித்து, கொத்துக் கொத்தாக இருந்துவரும் நிலையில் கொரோனா தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என உலக சுகாதார அமைப்பு உட்பட மருத்துவ வல்லுநர்கள் அனைவரும் கூறிவருகின்றனர்.

மருத்துவர்கள் தங்களின் உயிரைக்கொடுத்து கொரோனாவுக்கு எதிரான போரில் முதன்மையாக இருந்து போராடி வரும் நிலையில், அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 10,000 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். அலோபதி மருத்துவத்தால் தான் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர் என்று ராம்தேவ் பேசியது சர்ச்சையானது.

பாபா ராம்தேவுக்கு ரூ1,000 கோடி இழப்பீடு நோட்டீஸ்- இந்திய மருத்துவர் சங்கம்

இதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில், ராம்தேவ், கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பொய்யான பிரசாரம் செய்கிறார். அதனால் அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், ஹரித்வாரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாபா ராம்தேவ், “நான் விரைவாகவே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வேன். யோகா, ஆயுர்வேதம் ஆகிய பலத்துடன் கொரோனா தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டால் இரட்டை அரண் பாதுகாப்பைப் பெறுவீர்கள்.

இவ்வாறு செய்தால் கொரோனாவுக்கு எந்த ஒரு உயிரும் பலியாகாது. அலோபதி மருத்துவர்கள் கடவுளின் தூதுவர் போன்றவர்கள், அதில் எனக்கு சந்தேகம் கிடையாது. உண்மையில் மருத்துவர்கள் பூமிக்குக் கிடைத்த ஆசீர்வாதம்” என திடீர் பல்டி அடித்துள்ளார்.

பாபா ராம்தேவுக்கு எதிராக கருப்பு தினம் கடைப்பிடிப்பு- இந்திய மருத்துவ சங்கம்