அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை 4.9 ரிக்டர் அளவில் மிதமான அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அருணாசல பிரதேசத்தின் பர்சாவில் இருந்து தென்மேற்கே இன்று காலை 4.30 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

கடந்த சில நாட்களாக வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

முன்னதாக கடந்த 14 ஆம் தேதி பசிபிக் கடல் டோங்கா தீவின் அருகே கடலுக்கு அடியில் எரிமலை வெடித்து சிதறியது, தீவில் இருந்து 10,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னையிலும் எரிமலை வெடிப்பின் வளிமண்டல அதிர்வுகள் உணரப்பட்டது. மேலும் இந்த எரிமலை வெடிப்பின் பாதிப்புகள் வரும் காலங்களில் ஏராளமான வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.