ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்விற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தநிலையில், ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரி தற்போது மாற்றியமைக்கப்படவில்லை, வரி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் நூல் மூலப்பொருட்களின் விலை 30% முதல் 200% வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஜனவரி 01, 2022 முதல் ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரி 5% இருந்து 12% உயர்த்த உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.

ஒன்றிய அரசின் இந்த வரி உயர்வால் ஜவுளித்துறை மிக மோசமாக பாதிக்கப்படும். இது ஜவுளித் துறையில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும். மேலும் 1.1.2022க்கு மேல் துணிகள் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

எனவே நூல் மூலப்பொருட்கள் உள்பட ஜவுளிகள் மீதான வரி உயர்வு முடிவை உடனடியாக ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் சிறு குறு தொழில்துறையில் இருக்கும் பல லட்சம் பேர் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தினர்.

ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்களை ஜனவரி 1 ஆம் தேதி உயர்த்துவதை ஒத்திவைக்கும்படி மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 46-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று (31.12.2021) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வரி விதிப்பில் செய்யப்படும் மாற்றங்கள், மாநில அரசுகளின் கோரிக்கை மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜனவரி 1 ஆம் தேதி ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரி தற்போது மாற்றியமைக்கப்படவில்லை என்றும், வரி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் எந்தெந்த பொருட்களுக்கு வரி விதிப்பை மாற்றியமைப்பது என்பது குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது. காலணிகள் மீதான வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும் கூறினார்.

எனவே, ஜனவரி 1 ஆம் தேதி முதல் காலணிகளுக்கான ஜிஎஸ்டி வரியானது 12 சதவீதமாக உயர்த்தி வசூலிக்கப்படும். காட்டன் நீங்கலாக, ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட ஜவுளிப் பொருட்களுக்கு 12 சதவீத சீரான ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.