மக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட அரசு இ- சேவை காகித அளவிலேயே உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி என்னும் கிராமம் யானைகள் வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு டாஸ்மாக் கடைகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள ஜெய்னுலாப்தீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கு நவம்பர் 20 நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபொது, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மசினகுடிபகுதியில் டாஸ்மாக் கடைகள் தொடங்கும் திட்டம் ஏதும் இல்லை என கருத்து தெரிவித்தார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுகுறித்து கடந்த செப்டம்பர் மாதமே புகார் அளித்தும் இதுசம்பந்தமாக எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கபடாததால் தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து பொது மக்களின் மனுக்களுக்கு பதிலளிக்கும் அதிகாரிகளின் மெத்தன போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட அரசு இ- சேவை என்பது வெறும் காகித அளவிலேயே இருப்பதாக அதிருப்ப்தி தெரிவித்தனர்.

மேலும், கோரிக்கை மனுக்களுக்கு அதிகாரிகள் உரிய பதிலை அளித்திருந்தால் இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்யபட்டிருக்க மாட்டாது. மனுதாரரின் கோரிக்கை மனுவிற்கு பதிலளிக்காத அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனுதாரரின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் படி உத்தரவு பிறப்பித்திருக்கும் காரணத்தினால் தற்போது இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக்கூறி இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

எனது பதிவுகளைத் திரும்பப் பெறவோ, மன்னிப்பு கேட்கவோ மாட்டேன்- நடிகர் குணால் கம்ரா