மழைக் காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கவும், சமூக நலக் கூடங்கள் மூலம் உணவுகள் சமைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ந்து வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் கடந்த 2 தினங்களாக மழை கொட்டி வருகிறது. வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என தலைநகர் சென்னையே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

நேற்றும் இன்றும் தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 10, 11, 12 ஆகிய 3 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக சென்னையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு நிவாரணங்களை வழங்கி வருகிறார். மேலும் அம்மா உணவகங்களுக்கு நேரில் சென்ற முதல்வர், அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

இதனையடுத்து பருவமழைக் காலம் முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “திமுக ஆட்சிக்கு வந்ததும் 771 கி.மீ. தூரத்திற்கு மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. எனினும் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்கள், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி, மழை நீர் வடிகால் திட்டங்களில் மிகப் பெரிய ஊழல்கள் அதிமுக ஆட்சியில் நடந்துள்ளது. தேர்தல் தோல்வி காரணமாக ஷோ காட்டிவிட்டு எடப்பாடி பழனிச்சாமி பொய் சொல்கிறார் என்று தெரிவித்தார்.

மேலும் பருவமழைக் காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக 3 வேளையும் உணவு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளேன். அது மட்டுமல்லாமல் சமூக நலக் கூடங்கள் மூலம் சாம்பார் சாதம், சப்பாத்தி, தயிர் சாதம் உள்ளிட்ட உணவு வகைகளை 3 வேளையும் சமைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.