தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் நகரில் உள்ள அப்சல்கஞ்ச் பகுதியில் மிகவும் பழமையான ஒஸ்மானியா அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த மருத்துவமனை வாசலில் யாகுத்புரா பகுதியை சேர்ந்த முஹம்மது இர்பான் என்பவர் நின்றிருந்தபோது, மிதமிஞ்சிய போதையில் அவ்வழியாக வந்த ஒரு பெண் தன் கையில் இருந்த குழந்தையை இர்பான் கையில் திணித்தார்.
 
சற்று நேரம் குழந்தையை பார்த்து கொள்ளுங்கள், இதோ வந்து விடுகிறேன் என்று கூறிச் சென்ற அந்தப் பெண் சிலமணி நேரமாகியும் திரும்பி வரவில்லை. அதற்குள் இர்பான் கையில் இருந்த அந்த இரண்டுமாத பெண் குழந்தை பசி தாங்காமல் அழ ஆரம்பித்தது.
 
குழந்தையின் அழுகை அதிகரிக்கவே அருகாமையில் உள்ள தனது வீட்டுக்கு அதை தூக்கிச் சென்ற இர்பான், புட்டிப்பால் கொடுத்து சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அதை குடிக்க மறுத்த குழந்தையின் கதறல் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதற்குள் இரவு நெருங்கி விட்டதால், என்ன செய்வது? என்று புரியாமல் தவித்த இர்பான் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்.
 
குழந்தையை தூக்கிக்கொண்டு அருகாமையில் இருக்கும் அப்சல்கஞ்ச் காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கு இரவுநேரப் பணியில் இருந்த தலைமை காவலர் ரவீந்திரனிடம் நிலைமையை கூறி, பசியால் துடித்து அழும் குழந்தையை அவரிடம் ஒப்படைத்தார்.
 
அழுதழுது சோர்ந்து பலவீனமாக காணப்பட்ட அந்த குழந்தையின் தவிப்பையும் பசியையும் உணர்ந்த ரவீந்திரன், மகப்பேறு முடிந்து பிரசவ விடுமுறையில் வீட்டில் இருக்கும் தனது மனைவி பிரியங்காவை கைப்பேசியில் தொடர்பு கொண்டார்.
 
பேகம்பேட் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றும் பிரியங்காவிடம் விபரத்தை கூறினார். கணவன் கூறிய தகவல்களின் இடையே பசியால் துடித்து கதறும் குழந்தையின் அழுகுரல் மறுமுனையில் பேசிக்கொண்டிருந்த பிரியங்காவின் இதயத்தை கசியவைக்கவே.
 
சற்றும் தாமதிக்காமல் வாடகை கார் பிடித்து அப்சல்கஞ்ச் காவல் நிலையம் வந்துசேர்ந்தார், பிரியங்கா. அங்கு கணவர் ரவீந்திரன் குழந்தையை சமாதானப்படுத்த முடியாமல் தவித்து கொண்டிருந்ததை கண்ட அவர், உடனடியாக குழந்தையைக்கு  தாய்ப்பால் புகட்ட தொடங்கினார்.
 
இந்த தகவலை அறிந்த ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் அஞ்சானி குமார், தலைமை காவலர் ரவீந்திரனின் கடமை உணர்வையும், பெண் காவலர் பிரியங்காவின் தாய்மை உணர்வையும் பெரிதும் பாராட்டினார். பெற்றோர் தேடிவரும் வரை அந்த பெண் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பையும் பிரியங்காவிடம் ஒப்படைத்தார்.
 
இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாக தொடங்கியதும், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உரிய நேரத்தில் அரியதொரு உதவியை செய்த பெண் போலீஸ் பிரியங்காவுக்கும் அவரது கணவர் ரவீந்திரனுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
 
இதற்கிடையில் தெருக்களில் குப்பை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் அந்த குழந்தையின் தாயாரை போலீசார் கண்டுபிடித்து எச்சரித்து குழந்தையை ஒப்படைத்தனர்.