தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை, பாஜக தலைமை திட்டமிட்டு பிரச்சனை செய்வதாக பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டேவிட் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள மைக்கேல்பட்டி செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி, 12 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவர், கடந்த 21.1.2022 அன்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்டாய மதமாற்றம் செய்யச்சொல்லி மாணவியை பள்ளி நிர்வாகம் மற்றும் விடுதி நிர்வாகி துன்புறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் விடுதியிலுள்ள அனைத்து அறைகளையும் மாணவியை வைத்து சுத்தம் செய்யக்கூறி துன்புறுத்தியதாகவும் அதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்பட்டது.

இந்த விவகாரத்தை கையிலெடுத்த பாஜகவினர், மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகத்தின் கட்டாய மதமாற்ற முயற்சி தான் காரணம், எனவே கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தற்கொலை செய்துகொண்ட மாணவி பேசியதாக வீடியோ ஒன்றை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு, அது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தடையை மீறி ஏராளமான பாஜகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பள்ளி மாணவி விவகாரத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் கூறியிருந்தார். மேலும் பாஜகவினர் கூறும் கருத்துக்களை உண்மை இல்லை என தமிழ்நாடு அரசு மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தாலும் இந்த பிரச்சனை பெரிதாகி வருகிறது.

பள்ளி மாணவிக்கு நீதி வேண்டும் எனக்கூறி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தஞ்சை, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளை சாலை மறியல் போராட்டமும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று (25.1.2022) உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கட்டாய மதமாற்றம் என பாஜக கூறி வருவதில் உண்மையில்லை என தஞ்சாவூர் மாவட்ட பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டேவிட் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டேவிட் கூறும்போது, “கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக தங்கள் கட்சியினர் கூறிவருவதில் உண்மை இல்லை. தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் இருந்துள்ளது. அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டார்.

மாணவி தற்கொலை செய்து கொண்டவுடன் பள்ளி மாணவர்கள், விடுதி மாணவர்கள் மற்றும் தனக்குத் தெரிந்த நபர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, அதில் கட்டாய மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மாநில பாஜக தலைமை தங்களிடம் ஆலோசிக்காமல் இந்தப் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி வருகிறது. இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு” என்று தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவியின் தற்கொலையை வைத்து பாஜகவினர் போராட்டம் நடத்திவரும் நிலையில், அதே பாஜக கட்சியைச் சேர்ந்த தஞ்சாவூர் மாவட்ட பாஜக சிறுபான்மை பிரிவு தலைவரின் இந்த கருத்து பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தஞ்சை மாவட்ட பாஜக தலைவர் இளங்கோ, “தஞ்சை மாவட்ட பாஜக சிறுபான்மை பிரிவு தலைவரின் கருத்து தவறானது. அவரை யாராவது நிர்பந்தம் செய்திருக்கலாம். அந்த மாணவி பேசும் வீடியோ உள்ளது. எதை வைத்து அவர் இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை.

பாஜக இதை வைத்து அரசியல் செய்யவில்லை. உண்மை தெரிந்து, நீங்கள் அறிக்கை விடுங்கள் என்று கிறிஸ்துவ மிஷனரியில் நிர்பந்தம் செய்திருக்கலாம். எங்கள் போராட்டத்தில் ஏராளமான கிரிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். எனவே அவர் கூறுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

அவரும் கிறிஸ்துவர் என்பதால் கூறியிருக்கலாம். ஒரு கட்சியில் இருந்து கொண்டு உண்மை சம்பவத்தை பொய் என்றுக் கூறுவதை ஏற்க முடியாது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.