தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைப்பதற்காக யூடியூப் எனும் சமூக வலைத்தள பிரபலங்கள் ஒன்றிணைந்து ரூ.20 லட்சம் நிதி திரட்டியுள்ளனர்.

தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கையால் தற்போது கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதேபோல், ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதால், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத மாநிலமாகத் தமிழகம் உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், அரசு மருத்துவமனையின் ஆக்சிஜன் தயாரிப்பு மையத்திற்கு நிதி திரட்டுவதற்காகத் தமிழகத்தைச் சேர்ந்த யூடியூப் பிரபலங்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து ‘We For o2’ என்ற பிரம்மாண்ட தொடர் நேரலை நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

30-5-2021 (ஞாயிறு) மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம், செந்தில்வேல், ஆவுடையப்பன், ஆசிப், மதன் கௌரி மற்றும் பிளாக்சிப், நக்கலைட்ஸ், அரன் செய்,யு டர்ன், நீயாருடா கோமாளி உள்ளிட்ட YouTube சேனல்களின் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி மூலமாக மக்களிடமிருந்து திரட்டப்பட்ட ரூ.20 லட்சம் நிதியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைப்பதற்கு கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

யூட்யூபர்களின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இவர்களின் இந்த முயற்சி பலருக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

பருப்பு மற்றும் எண்ணெய் கொள்முதலுக்கான தடை நீக்கம்- உயர்நீதிமன்றம்