தொன்மையான நடராஜர் சில உட்பட 7 சுவாமி சிலைகளை ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற பாஜக நிர்வாகி, 2 காவலர்கள் உட்பட 4 பேரை சிலைக் கடத்தல் தடுப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 7 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூரைச் சேர்ந்தவர் அலெக்ஸ் என்கிற அலெக்சாண்டர். இவர் பாஜக மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளராக உள்ளார். இவர் தொன்மையான சுவாமி சிலைகளை சட்டவிரோதமாகக் கடத்தி, விற்பனை செய்ய முயற்சிப்பதாக மதுரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு சில தினத்திற்கு முன்பு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் தினகரன் மேற்பார்வையில், மதுரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி மலைச்சாமி தலைமையில் ஆய்வாளர் இளங்கோ, சத்தியபிரபா, கவிதா, பிரேமான சாந்தகுமார், செல்வராஜ், சந்தனக்குமார் அடங்கிய தனிப்படையினர் அலெக்சாண்டர் என்பவரை கண்காணித்து, அவரை கடந்த 2 ஆம் தேதி ராமநாதபுரத்தில் வைத்து கைது செய்தனர்.

விசாரணையில், அவரிடம் மொத்தம் 7 சிலைகள் இருப்பது தெரியவந்தது. அச்சிலைகளை தன்னிடம் அருப்புக்கோட்டை காவலர்கள் இளங்குமரன், நாகநரேந்திரன், விருதுநகரை சேர்ந்த கருப்புசாமி ஆகியோர் விற்க கொடுத்ததாக அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகி அலெக்சாண்டர் கொடுத்த தகவலின் படி மற்ற 3 பேரையும் கைது செய்து, கால்வாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொன்மையான உலோக சிலைகளான 2 அடி உயர நடராஜர், 1 1/4 அடி நடராஜர் சிலை, 1 1/2 நாககன்னி சிலை, ஒரு அடி உயர காளிசிலை, 3/4 உயர முருகன் சிலை, 1/2 உயர விநாயகர் சிலை, 1/2 நாகதேவதை சிலை ஆகிய 7 சிலைகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு பின்னர், 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், கடந்த 4 ஆண்டுக்கு முன்பு, இளங்குமரன் திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாகநரேந்திரன், விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலைச் சேர்ந்த கணேசன், கருப்புசாமி ஆகிய 4 பேரும் சேலம் எடப்பாடி அருகிலுள்ள ஒரு மலை கிராமத்திலுள்ள வீட்டில் மேற்படி சிலைகள் விற்பனைக்கு இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்றுள்ளனர்.

பின்னர் 4 பேரும் தங்களை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் எனக் கூறி சிலைகளை எடுத்து வந்ததும் தெரிந்தது. மேலும் இச்சிலைகளை பாஜக நிர்வாகி அலெக்ஸ்சாண்டர் மூலம் சுமார் ரூ.5 கோடிக்கு விற்க முயன்றதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் கைப்பற்றிய சிலைகள் எந்த கோயிலைச் சேர்ந்தது என்பது குறித்தும், அவற்றின் தொன்மை பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது. தனிப்படையினரை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி பாராட்டினர். மேலும் கைப்பற்றிய சிலைகளை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.