பள்ளி மாணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதோடு, அவருடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற ஆசிரியை ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள மழவராய நல்லூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
அதே மாவட்டம் அம்பாபூர் கிராமத்தை சேர்ந்த 24 வயது பெண் ஆசிரியர் ஒருவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் அதே பள்ளியில் பயிற்சி ஆசிரியையாக சேர்ந்து வேலை பார்த்து வந்தார்.
இதனையடுத்து 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க சென்றபோது, ஆசிரியைக்கு அந்த மாணவர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டு அவரை காதலிக்க தொடங்கி உள்ளார். ஆசிரியையின் அணுகு முறையால் ஈர்க்கப்பட்ட மாணவரும் மதி மயங்கி, இவர்களது காதல் வகுப்பறையை தாண்டி வெளியிலும் தொடர்ந்தது.
இந்நிலையில் அரசல் புரசலாக வந்த தகவலின் பேரில் ஆசிரியையின் பெற்றோர் மாணவருடனான காதல் விஷயம் பற்றி கேட்டபோது, அவர் சற்றும் மறுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை கடுமையாக கண்டித்தனர். ஆனால் ஆசிரியை அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
அதேபோல் மாணவர் வீட்டிற்கும் விஷயம் தெரிந்து அவரையும் பெற்றோர் கண்டித்த நிலையிலும், மாணவர்-ஆசிரியை காதல் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. எந்நாளும் தங்களை சேரவிட மாட்டார்கள் என்பதை உணர்ந்த அவர்கள் காதல் ஈடேற வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்திருந்தனர்.
இதற்கிடையே அந்த மாணவர், பள்ளி படிப்பை முடித்து பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் உள்ள அரசு கல்லூரியில் முதலாமாண்டும் சேர்ந்தார். கடந்த அக்டோபர் மாதம் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மூங்கில்பாடி கிராமத்தில் உள்ள மாணவனின் தாய் வழி பாட்டி வீடான தங்கம் என்பவரது வீட்டிற்கு வந்தனர்.
அப்போது வீட்டில் யாருக்கும் தெரியாமல் அதே ஊரில் உள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணமும் செய்து கொண்டனர். ஆனாலும் அவர்களுக்கு மறைமுக எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்ததால் சேர்ந்து வாழ முடியாமல் மனமுடைந்து தற்கொலை முடிவுக்கு வந்துள்ளனர்.
அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூங்கில் பாடியில் உள்ள வீட்டில் வைத்து இருவரும் பருத்திக்கு தெளிக்கும் விஷ மருந்தை குடித்து விட்டு, காதிலும் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
பின்னர் மாணவர், ஆசிரியை இருவரும் உயிர் பிழைக்கும் ஆசையில் தங்களது இருசக்கர வாகனத்தில் சென்று குன்னம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை பெற்றனர். இதில் விஷம் ஏறிய ஆசிரியை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதுதொடர்பாக தகவலறிந்த குன்னம் காவல்துறையினர் மைனர் சிறுவனான மாணவரை காதலித்து, திருமணம் செய்ததற்காக ஆசிரியை மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 366 (விருப்பத்திற்கு மாறாக கட்டாய திருமணம்), 309 (தற்கொலைக்கு தூண்டுதல்), 116 (குற்றம் புரிய தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது ஆசிரியை குணமடைந்த நிலையில் அவரை குன்னம் காவல்துறையினர் கைது செய்தனர்.
பள்ளி மாணவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டதோடு, அவருடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற ஆசிரியை ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் அளித்து வந்ததாக ஆசிரியர்கள் பலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் முதன் முதலாக தன்னை விட வயது குறைந்த மாணவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆசிரியை போக்சோவில் கைதாகி இருப்பது சர்ச்சையாகி உள்ளது.