சானிடைசர் பயன்படுத்திய கைகளால் பட்டாசு வெடிக்காதீர்கள் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த பத்து மாதங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைவரின் வீட்டிலும் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பழக்கத்தில் உள்ளது. சானிடைசர் சிறப்பாக செயல்படுவதற்காக அதில் ஆல்கஹால் கலக்கப்படுகிறது. ஆல்கஹால் எளிதில் தீப்பற்றக்கூடிய திரவம்.
ஆகவே கைகளில் சானிடைசர்களை உபயோகித்து விட்டு தீபங்கள், மத்தாப்புகள், வெடிகள் போன்றவற்றைத் தொடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், வீட்டிலும் சானிடைசரையை தீபங்கள் மற்றும் பட்டாசுகளுடன் ஒன்றாக வைக்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவத் துறை வல்லுனர்கள்.
பட்டாசு வெடிக்கும் நாட்களில் மட்டும் சானிட்டைசருக்கு பதிலாக, கையில் நன்கு சோப்பு போட்டு கழுவி கொள்ளவும். சானிடைசர் கைகளில் படிந்து இருக்கும் என்பதால், அதை பயன்படுத்தி சில மணி நேரம் ஆகியிருந்தாலும், பட்டாசு வெடிக்க வேண்டாம். தீ பரவ வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.
பட்டாசு வெடிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை:
வெடி அல்லது மத்தாப்பின் துகள்கள் பறந்து வந்து கண்களுக்குள் விழுந்து விட்டால், கட்டாயம் கண்களை கசக்குதல் கூடாது. இது பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி விடக்கூடும். எரிச்சலைக் குறைக்க ஐஸ் கட்டிகளையோ ஐஸ் தண்ணீரையோ கண்களில் ஊற்றக்கூடாது.
சாதாரண வெப்பநிலையில் இருக்கும் நீரில் கண்களை நன்றாக கழுவ வேண்டும். சுத்தமான துணியைக் கொண்டு கண்களை மூடி விட வேண்டும் பாதிக்கப்பட்டவரை ஆசுவாசப்படுத்தி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்கள் நல சிறப்பு நிபுணரை சந்திக்க வேண்டும்.
மருந்தகங்களில் சென்று சொட்டு மருந்துகளை வாங்கிப் போட்டு நேரத்தை கடத்தினால் பல நேரங்களில் ஒரு பக்க பார்வையையே இழக்க வேண்டியிருக்கும்.
பட்டாசில் இருந்து வரும் சிதறல்கள் படுவதால் தீப்புண் காயங்கள் நேரலாம். இத்தகைய புண்கள், தோலில் சிறு கொப்புளங்களை உருவாக்கும்.
இதற்கு சாதாரண வெப்பநிலையில் இருக்கும் நீரை எடுத்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் தொடர்ந்து அந்த காயம் மேல் ஊற்ற வேண்டும். சில்வர் சல்ஃபாடயசின் எனும் களிம்பை உடனே அருகில் இருக்கும் மருந்துக்கடையில் வாங்கி அந்த காயம் ஏற்பட்ட பகுதியில் தடவ வேண்டும்.
காயத்தை மூடுவதற்கு புண்ணோடு எளிதில் ஒட்டாத நெகிழியால் ஆன துண்டை உபயோகிக்கலாம். கட்டாயம் துணியால் ஆன பேண்டெய்டுகளை தவிர்க்க வேண்டும்.
கட்டாயம் அந்த புண்ணில் பேனா மையை ஊற்றுவதோ, வேறு காப்பி பொடி அப்புவதோ, தைலத்தை ஊற்றுவதோ தவறு. கட்டாயம் ஐஸ்கட்டியோ ஐஸ் தண்ணீரோ ஊற்றக்கூடாது. ஏற்பட்ட சிறு கொப்புளங்களை உடைத்தல் கூடாது. அதன் வழி கிருமித்தொற்று ஏற்பட வழிவகுக்கும்.
கட்டாயம் பெரியோர் கண்காணிப்பின்றி குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்கக்கூடாது. கைகளை வைத்து வெடி வெடிப்பது ஆபத்தானது
ஒரு வாளித்தண்ணீர் கட்டாயம் பட்டாசு வெடிக்கும் இடத்தின் அருகில் இருக்க வேண்டும். வெடிக்காத வெடிக்கு அருகில் செல்லக்கூடாது. அதன் மீது தண்ணீரை ஊற்றி அணைத்து விட வேண்டும்.
காலணிகளை அணிந்து கொண்டு மத்தாப்பு வெடி வெடிக்க வேண்டும். பட்டாசுகளை வெடித்து முடித்த பின் அந்த இடத்தில் முழுவதும் தண்ணீர் ஊற்றி மீதம் எரியும் கங்குகளை அணைக்க வேண்டும்.
மேற்கூறிய விதிமுறைகளை பின்பற்றி பட்டாசுகளை வெடித்து பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடி மகிழ்வோம்.
அனைவர்க்கும் ஸ்பெல்கோ டீம் சார்பாக இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்…
திருவண்ணாமலை தீபத் திருவிழா, கிரிவலத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை- மாவட்ட ஆட்சியர்