கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த பொது முடக்கம் தற்போது கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், அந்நாட்டில், நாள்தோறும் பாதிப்புகள் அதிகரித்து இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்னிக்கை 22,992 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,017 பேராகவும் உள்ளது.

உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு சோதனை அளவில் நடைபெற்று முன்னேற்ற பாதையில் சென்று வருகிறது. அதேசமயம், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பிலிப்பைன்ஸ் நாட்டு குழந்தைகள் பள்ளிகளுக்கு வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் கல்வித்துறை செயலர் லியோனர் பிரியோனஸ் கூறுகையில், “தனிமனித இடைவெளியுடன் குழந்தைகளைப் பள்ளியில் உட்கார வைக்க உடன்பாடு இல்லை. குழந்தைகள் தங்கள் நண்பர்களை நெருங்கும் போது நிச்சயமாக தொற்று பரவும். எனவே கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறப்பு இருக்காது.

ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வழிக்கற்பித்தல் வகுப்புகள் தொடங்கும். ஆனாலும், வறுமையான மற்றும் இணைய இணைப்பு இல்லாத தொலைதூர சமூகத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்வி குறித்துக் கவலை எழுகிறது. இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து யோசித்து வருகிறோம்” என்றார்.

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,230,907 ஆக உயர்ந்துள்ளது. 409,381 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: ‘கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’… தமிழக அரசை விமர்சித்த தேமுதிக விஜயகாந்த்