வாட்ஸ்அப் நிறுவனம் அதன் செயலியில் ஒரே நேரத்தில் 4 பேருக்கு மேல் வீடியோகால் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளது அதன் பயனாளிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல நிறுவனங்களின் ஊழியர்களும் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர். இதையடுத்து வழக்கமாக அலுவலகத்தில் நடக்கும் மீட்டிங்குகள் தற்போது வீடியோகால் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக கூகுள் மீட் மற்றும் ஜும் போன்ற பல செயலிகள் பெருமளவில் பயன்பாட்டில் உள்ளன. இதில் ஜும் செயலி பாதுகாப்பற்றது என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜூம் (ZOOM) செயலியில் தகவல்கள் திருட்டு., எச்சரிக்கும் மத்திய உள்துறை அமைச்சகம்
இதைத்தொடர்ந்து வீடியோகால் தொடர்பான செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் வாட்ஸ்அப் நிறுவனம் அதன் செயலியின் வீடியோ அழைப்பில் கூடுதல் நபர்களைச் சேர்க்கும் புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளது.
தற்போது வாட்ஸ் அப்பில் வீடியோ மற்றும் குரல் வழி அழைப்புகளில் அதிகபட்சமாக 4 பேர் வரை மட்டுமே இணைந்திருக்க முடியும் எனும் நிலையில், புதிய எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்பது குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை என வாட்ஸ் அப்பின் புதிய வசதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் WABetaInfo எனும் இணையதளத்தில் தகவல் பகிரப்பட்டுள்ளது..
இதுபோல் இன்னும் பல வகையான புதிய அம்சங்களை வாட்ஸ்அப் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வாட்ஸ்அப் குரல் வழி மற்றும் வீடியோ வழி அழைப்புகளின் பயன்பாடு 2 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.