இந்தியில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகி வரும் “லக்ஷ்மி பாம்” படத்தில் இருந்து இயக்குனர் ராகவா லாரன்ஸ் விலகுவதாக அறிவித்ததையடுத்து, சமாதானம் பேச படக்குழுவினர் சென்னை வரவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படம் பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து, காஞ்சனா படத்தை எடுத்தார். அதுவும் வெற்றி அடையவே அடுத்தடுத்து காஞ்சனா 2, காஞ்சனா 3 என படங்கள் எடுத்து தன் முத்திரையை பதித்தார்.
சமீபத்தில் வெளியாகி ஹிட்டான முனி சீரிஸின் காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருடன் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ராகவா லாரன்ஸின் காஞ்சனா வெற்றியை தொடர்ந்து, இப்படம் இந்தியில் ‘லகஷ்மி பாம்’ என்ற பெயரில் தயாராகி வருகின்றது. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்கும் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் மும்பையில் தொடங்கி நடைபெற்று வந்தது.
இதையடுத்து, எவ்வித தகவலும் இல்லாமல், தன்னிடம் கலந்து பேசாமல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது வருத்தமளிப்பதாகவும், படத்தின் இயக்குநர் என்ற மரியாதை இல்லாத காரணத்தாலும் படத்தில் இருந்து விலகுவதாக லாரன்ஸ் தெரிவித்தார். மேலும், நடிகர் அக்ஷய்குமார் மீது அதிக மதிப்பிருப்பதால், இப்படத்தின் கதையை தருவதற்கு தயார் என்றும், வேறு இயக்குநரை வைத்து படத்தை இயக்கி வெற்றியடைய செய்ய வாழ்த்துவதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.
லக்ஷ்மி பாம் திரைப்படத்தில் இருந்து விலகுவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தது ரசிகர்கள் மட்டுமின்றி படக்குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், இது குறித்து இயக்குநர் லாரன்ஸிடம் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்த லக்ஷ்மி பாம் படத்தின் தயாரிப்பு குழுவினர் சென்னை வரவிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களது சந்திப்பு இந்த வாரத்தில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.