ராசிபுரம் பகுதியில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது என சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
 
அவற்றில் 24 பெண்குழந்தைகள் எனவும் 6 ஆண் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தைகளை விற்றவர்களையும், வாங்கியவர்களையும் கண்டறிந்து விசாரிக்க உள்ளோம் என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
குழந்தை விற்பனை வழக்கில் இன்று கைது செய்யப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் சாந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
மேலும் சாந்தியை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார். குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஏற்கனவே 8 பேர் கைதான நிலையில் 9வது நபராக சாந்தியை கைது செய்தனர்.
 
குழந்தை விற்பனை வழக்கில் சிபிசிஐடி காவல் முடிந்ததை அடுத்து 4 பேர் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர் அருள்சாமி ஆகியோரை 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தது சிபிசிஐடி.
 
ஒருநாள் காவலில் எடுக்கப்பட்ட பெண் இடைத்தரகர்கள் நிஷா மற்றும் பர்வீன் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.