போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளை பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
 
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அரசு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
அவர்கள் தங்கள் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அரசு கேட்டு வருகிறது. இந்தநிலையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் நாளைக்குள் பள்ளிக்கு திரும்ப வேண்டும் நாளைக்குள் பள்ளிக்கு திரும்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை இருக்காது என பள்ளி கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். 22-ம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதனால் பள்ளிகளின் இயக்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு பதிலாக 10000 ரூ மாத சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.
 
மேலும் அதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 28-ம் தேதி மாலைக்குள் பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக கருதப்பட்டு, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்,
 
அதற்கு பிறகு அவை காலி பணியிடங்களாக அறிவிக்கப்பட்டதனால் மீண்டும் அதே பணியிடத்தில் இருப்பவர்கள் அந்த வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்டு எந்த காலி பணியிடம் இருக்கிறதோ அதில் தான் சேர முடியும் என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.
 
ஆனால் திட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ போராட்டம் நாளையும் தொடரும் என ஜாக்டோ-ஜியோ கூட்டத்துக்கு பின் நிர்வாகி மீனாட்சிசுந்தரம் திருச்சியில் அறிவித்துள்ளார்.
 
மதுரையில் பேசிய ஜாக்டோ-ஜியோ நிர்வாகி சுரேஷும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுரேஷ் தெவித்துள்ளார்.